12 ஏக்கர்... 7 மாதங்கள்... 25 லட்சம்... பணம் காய்க்கும் பந்தல்...!

'புதுப்புது யுக்திகளைப் புகுத்தி, புத்திசாலித்தனமாக செயல்படுவர்களுக்கு... விவசாயம், பொன்முட்டையிடும் வாத்துதான்’ என்பதை நிரூபித்து வருகிறார், எழுபத்து இரண்டு வயதைக் கடந்த மூத்த விவசாயி 'கேத்தனூர்’ பழனிச்சாமி. கேத்தனூர், ஆறு, குளம், வாய்க்கால்... என இயற்கை நீராதாரத்துக்கு வாய்ப்பில்லாத ஊர். ஆயிரத்து இருநூறு அடிக்கும் கீழே போய்விட்ட நிலத்தடி நீர்மட்டம். வறண்டு கிடக்கும் பாசனக் கிணறுகள்... இப்படியான சூழலிலும் 'பந்தல்’ விவசாயத்தில் முடிசூடாத மன்னராக அரை நூற்றாண்டு காலம் அசத்தி வரும், பழனிச்சாமியின் வெற்றிச் சூத்திரத்தை அறிந்து கொள்ள... திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் கிராமத்தில் உள்ள அவரது பண்ணைக்குப் பயணித்தோம்.

வாழ்க்கையை மாற்றிய கல்பந்தல்!

Images

''இந்த மாட்டுக்கு மூக்கணாங் கயித்தை மாத்தப்பா; இந்தக் கன்னுக்குட்டிய புடிச்சு வேப்பமர நிழல்ல கட்டப்பா...''

-தொழுவத்தில் நின்றபடி வேலையாட்களிடம் சொல்லிக் கொண்டிருந்த பழனிச்சாமி, நம்மைக் கண்டதும், வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்...

''எங்களுக்கு மொத்தமா 75 ஏக்கர் நிலம் இருக்கு. பருத்தி, கொண்டைக் கடலை, கோதுமை, கம்புனு ஒரு காலத்துல மானாவாரி வெள்ளாமையில கொடிகட்டிப் பறந்த ஊருங்க இது. இப்போ, கிணத்துப் பாசனத்தை நம்பித்தான் வண்டி ஓடுது. 50 வருஷத்துக்கு முன்ன கொடைக்கானலுக்குப் போயிட்டிருந்தேன். அப்போ, ஒரு இடத்துல கல்பந்தல் போட்டு திராட்சை சாகுபடி பண்ணிட்டுருந்தாங்க. அப்போதான், பந்தல் விவசாயத்தைப் பத்தியே தெரிஞ்சிகிட்டேன். உடனே, என் தோட்டத்துல பந்தல் போட்டு, திராட்சையைப் போட்டேன். நல்ல வருமானம் கிடைச்சுது. அதனால, என்னை 'திராட்சைத் தோட்டத்துக்காரர்’னே கூப்பிட ஆரம்பிச்சாங்க. 88-ம் வருஷம் வரைக்கும் திராட்சை சாகுபடிதான். கூடவே, கத்திரி, தக்காளி, மிளகாய்னு காய்கறி விவசாயமும். 89-ம் வருஷத்துல இருந்து பந்தல்ல காய்கறி சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். இப்போ, நாலு ஏக்கர்ல பாகல், மூணு ஏக்கர்ல பீர்க்கன், நாலு ஏக்கர்ல புடலை, ஒரு ஏக்கர்ல கோவைக்காய்னு மொத்தம் 12 ஏக்கர்ல பந்தல் விவசாயம் செய்றேன்.

நல்வழி காட்டிய நம்மாழ்வார்!

Images

ஆரம்பத்துல, லாரி லாரியா உரத்தைக் கொண்டு வந்து கொட்டி, ரசாயன விவசாயம்தான் செஞ்சேன். அதேமாதிரி, வீரியமான பூச்சிக்கொல்லிகளைத்தான் தெளிச்சுட்டிருந்தேன். பகல் முழுக்க என் பண்ணையில பவர் ஸ்பிரேயர் ஓடுற சத்தம் கேட்டுக்கிட்டேதான் இருக்கும். ஒவ்வொரு முறையும் கணக்கு பாக்குறப்போ, உற்பத்திச் செலவுதான் அதிகமா இருந்துச்சு. லாபம் கம்மியா இருந்துச்சு. 'செலவை எப்படி குறைக்கலாம்?’னு பலர்கிட்ட யோசனை கேட்டுட்டிருந்த சமயத்துலதான், நம்மாழ்வார் பத்திக் கேள்விப்பட்டேன். அவரைத் தேடிப்போய் சந்திச்சுப் பேசி பல தகவல்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். 'இயற்கை விவசாயம்தான் லாபகரமான விவசாயத்துக்கு ஒரே தீர்வு’னு முடிவு செஞ்சேன். கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுட்டேன்.

பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமிலம், அரப்பு-மோர் கரைசல்னு இயற்கை இடுபொருட்களை நானே தயாரிச்சு, பயிர்களுக்குக் கொடுத்ததுல நல்ல பலன் கிடைச்சது. அப்படியே, சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துகிட்டு பயிற்சி எடுத்த பிறகு, முழுக்க முழுக்க இயற்கைக்கு மாறிட்டேன். கலப்பின பசுமாடுகளைக் குறைச்சுட்டு, காங்கேயம் மாடுகளை வாங்கினேன். அதுங்களோட சாணம், மூத்திரத்தை வெச்சு, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அமுதக்கரைசல்னு எல்லா இடுபொருட்களையும் தயாரிக்கிறேன்'' என்ற பழனிச்சாமி... புடலை பந்தலுக்குள் அழைத்துச் சென்றார்.

பந்தலுக்குள் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்த முற்றிய வெளிர் பச்சை நிற குட்டைப்புடலங்காய்களைப் பறித்து, சிறிய தள்ளுவண்டிகளில் சில பெண்கள் கொட்ட, அதை அப்படியே களத்து மேட்டுக்கு உருட்டி சென்று கொண்டிருந்தனர், சில ஆண்கள். அந்த பந்தலுக்குள் நின்றவாறே, பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார், பழனிச்சாமி.

அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

ஏக்கருக்கு 1,25,000 ரூபாய்!

'நடவு செய்ய வேண்டிய நிலத்தை உழுது, கல்தூண்களை ஊன்றி கம்பிகளைக் கட்டி பந்தல் அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைக்க கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்ச ரூபாய் வரை செலவாகும். ஒருமுறை கல்பந்தல் அமைத்து விட்டால்... கம்பிகள் 50 வருடம் வரையிலும், தூண்கள் 100 வருடங்களுக்கு மேலும் பயன்தரும். பந்தல் அமைத்த பிறகு, 16 அடி இடைவெளியில் தென்வடலாக பார் அமைத்து, சொட்டு நீர்ப்பாசனக் கருவிகளைப் பொருத்திக் கொள்ளவேண்டும். ஏக்கருக்கு தலா, ஒன்றரை கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை 12 டன் தொழுவுரத்தில் கலந்து, பார் பாத்திகளுக்குள் தூவி... 5 அடி இடைவெளியில் இரண்டரை அடி அகலம் கொண்ட வட்டக்குழிகளை அமைக்க வேண்டும்.

விதைநேர்த்தி அவசியம்!

புடலை 200 நாள் பயிர். தரமான நாட்டு விதைகளை (ஏக்கருக்கு 400 கிராம் தேவைப்படும்) அரைலிட்டர் பஞ்சகவ்யாவில் இட்டு, 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழல் தரையில் பரப்பி, உலர வைக்க வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்யும் போது முளைப்புத்திறன் அதிகரிக்கும். ஒரு குழிக்கு மூன்று விதைகள் என்ற கணக்கில் படுக்கை வசமாக நடவு செய்து... ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் பாசனம் செய்யவேண்டும். நடவு செய்த 16-ம் நாளில் களை எடுக்க வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை, 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.

வளர்ச்சிக்குப் பிண்ணாக்கு... பூச்சிக்கு புளித்த மோர்!

ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும், ஒவ்வொரு செடியின் தூரிலும் அரை லிட்டர் பிண்ணாக்குக் கரைசலை ஊற்ற வேண்டும். நடவு செய்த 18-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு, 250 மில்லி அரப்பு-மோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, அனைத்து செடிகள் மேலும் படும்படி விசைத்தெளிப்பான் மூலம் புகைபோல் தெளிக்க வேண்டும். 23-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து செடிகள் மேல் செழிம்பாகத் தெளிக்க வேண்டும்.

Images

நடவிலிருந்து 20 நாட்களுக்கு ஒரு முறை, 100 மில்லி புளித்த மோர், 50 கிராம் சூடோமோனஸ் ஆகிய இரண்டையும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தேவைப்படும் அளவுக்குத் தெளிக்க வேண்டும். இது இலைப்பேன் மற்றும் அசுவிணி உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, செடிகள் ஒரே சீராக வளர உதவி செய்கிறது. நடவு செய்த 60-ம் நாளுக்குப் பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு, 200 மில்லி புளித்த மோர், 100 கிராம் சூடோமோனஸ் என அளவைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இதைத் தெளித்து வந்தால், சாம்பல் நோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கள் இருக்காது.

26, 27-ம் நாட்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம், ஆறு லிட்டர் மீன் அமிலம், 70 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து ஒவ் வொரு செடிக்கும் அரைலிட்டர் அளவுக்கு நேரடியாக ஊற்ற வேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாக செயல்படும். 30-ம் நாளுக்குள் கொடிகளை கொம்பில் படர விட வேண்டும். கொம்புக்குப் பதிலாக கெட்டியான காடா நூலை கம்பியில் இழுத்துக்கட்டியும் படரவிடலாம். திசைமாறிப்போகும் கூடுதல் பக்கக் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.

60-ம் நாளில் 100 மில்லி அரப்பு-மோர் கரைசல், 100 மில்லி தேங்காய்ப்பால், 100 மில்லி இளநீர், இவற்றுடன் 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால், பெண்பூக்கள் உதிராமல் இருப்பதோடு, பூஞ்சண நோய்த் தாக்குதலும் இருக்காது.

பூச்சிகளுக்குப் பொறிகள்!

பந்தலுக்கு உள்பகுதியில் இரண்டு, மூன்று இடங்களில் விளக்குப் பொறிகளைக் கட்டித் தொங்க விட்டால், பச்சைப்புழுக்கள், காய்துளைப்பான்கள் போன்றவைக் கட்டுப்படும். பந்தலுக்குள் இரண்டு மூன்று இடங்களில் 'சிறிய அரிக்கேன்' விளக்கு வடிவத்தில் உள்ள இனக்கவர்ச்சிப் பொறிகளைக் கட்டித் தொங்கவிட்டால், பந்தல் காய்கறிகளைத் தாக்கும் குளவிகளைக் கட்டுப்படுத்தலாம் இந்தப் பொறிக்குள் சென்று மாட்டிக் கொண்டு அவை இறந்துவிடும்.

இதே பராமரிப்புதான் அனைத்து வகை பந்தல் காய்கறிகளுக்கும். ஆனால், பாகலுக்குக் கொஞ்சம் கூடுதல் பராமரிப்பு தேவைப்படும். புடலை சாகுபடியில், நடவு செய்த 65-ம் நாளில் இருந்து காய்களைப் பறிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, 140 நாட்கள் வரை காய்ப்பு இருக்கும். சராசரியாக ஏக்கருக்கு 40 டன் அளவுக்கு விளைச்சல் இருக்கும். நாட்டுப்புடலை என்பதால், அடுத்த போகத்துக்கு உரிய விதைகளை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.மீண்டும், மீண்டும் விதைக்காக செலவு செய்வது மிச்சம்'

26 லட்ச ரூபாய் லாபம்!

சாகுபடிப் பாடம் முடித்த பழனிச்சாமி, ''ஒரு கிலோ புடலை சராசரியா கிலோ 15 ரூபாய்னு விலைபோகுது. ஒரு ஏக்கர்ல விளையற 40 டன் காய்கள் மூலமா, 200 நாள்ல கிட்டத்தட்ட 6 லட்ச ரூபாய் வருமானமா கிடைக்கும். நான் நாலு ஏக்கர்ல புடலை போட்டிருக்கேன். அது மூலமா 24 லட்ச ரூபாய் கிடைக்கும். சாகுபடிச் செலவு

10 லட்ச ரூபாய் போக... 14 லட்ச ரூபாய் லாபம். நாலு ஏக்கர்ல பாகல் இருக்கு. ஏக்கருக்கு சராசரியா 25 டன் விளைச்சல் இருக்கும். இதுவும் சராசரியா கிலோ 15 ரூபாய்னு விலைபோகும். நாலு ஏக்கர் பாகல் மூலமா 15 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.

10 லட்ச ரூபாய் சாகுபடிச் செலவு போக 4 லட்ச ரூபாய்க்கு மேல் லாபம்!

Images

மூணு ஏக்கர்ல பீர்க்கன் இருக்கு. ஏக்கருக்கு 30 டன் கிடைக்கும். இதுவும் கிலோ 15 ரூபாய்னு விலைபோகுது. மூணு ஏக்கர்லயும் சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல 9 லட்ச ரூபாய் செலவு போக, 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம்.

ஒரு ஏக்கர்ல கோவைக்காய் இருக்கு. இதுல ஏக்கருக்கு 30 டன் மகசூல் கிடைக்கும். இது கிலோ 20 ரூபாய்க்கு விலைபோகுது. இதன் மூலமா 6 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். 3 லட்ச ரூபாய் செலவு போக மூணு லட்ச ரூபாய் லாபம்.

ஆகமொத்தம் 12 ஏக்கர்ல இருந்து, 25 லட்ச ரூபாய்க்கு மேல லாபமா கிடைக்குது. வியாபாரிகள் என் தோட்டத்துக்கே வந்து காய்களை வாங்கிட்டுப் போறதால போக்கு வரத்துச் செலவுகூட இல்லை'' என்ற பழனிச்சாமி,

''இவ்வளவு வருமானத்தைப் பாக்கும்போது மலைப்பா இருக்கலாம். ஆனா, இந்த வெற்றிக்குக் காரணம் தினமும் நான் பந்தலுக்குள்ள போய் பாத்துப் பாத்து தேவையான இயற்கை இடுபொருளைக் கொடுக்குறதுதான். நிலம், நீர், நுணுக்கமான விவசாய அறிவு இருந்தா போதும்... எந்தப் பகுதியில வேணும்னாலும் பந்தல் விவசாயம் செய்து, யார் வேணும்னாலும் ஜெயிக்க முடியும்'' என்று நம்பிக்கை வார்த்தைகள் சொன்னார்.