பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள்... பட்டையைக் கிளப்பிய பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015

Images

செப்டம்பர் 25. பசுமை பூத்துக் காட்சி அளித்தது மஞ்சள் மாநகர். ஆம், அன்றுதான் ‘பசுமை விகடன்’ நடத்திய மாபெரும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் துவக்க விழா! முன்தினம் மழை, இதமான சூழலை ஏற்படுத்த அதிகாலை முதலே கண்காட்சி நடைபெற்ற ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்துக்குள் வரத்தொடங்கினர், விவசாயிகள். சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் விவசாயிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துக் காத்திருந்தன. காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் முன்னிலையில், தவத்திரு.குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கண்காட்சி அரங்கைத் திறந்து வைத்தார். உற்சாகத்துடன் அரங்கினுள் நுழைந்த விவசாயிகள் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டனர்.

பாரம்பர்ய விதைகள், இயற்கை இடுபொருட்கள், இயற்கை உணவுப் பொருட்கள், நவீன தொழில்நுட்ப விளக்க அரங்குகள், சொட்டுநீர்க் கருவிகள், விவசாயக் கருவிகள் போன்றவற்றைக் கொண்ட அரங்குகள் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கால்நடைப் பல்கலைக்கழகம், வேளாண்துறை அரங்குகள் என அனைத்து அரங்குகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கண்காட்சியைத் திறந்து வைத்துச் சுற்றிப் பார்த்த சிறப்பு அழைப்பாளர்கள், கருத்தரங்கு மேடைக்கு வந்தனர். அடிகளார், ஆந்திர மாநில முன்னோடி விவசாயி நாகரத்தின நாயுடு மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் துவக்கி வைத்தனர். பச்சைக் கம்பளம் விரித்த கருத்தரங்குக் கூடத்தில் அரங்கு நிறைய விவசாயிகள் கூடியிருக்க, இனிதே துவங்கியது கருத்தரங்கு.

Images

பலத்த கரவொலிக்கு நடுவே பேசத் தொடங்கிய நாகரத்தின நாயுடு, “கரடுமுரடான கற்கள் நிறைந்த ஓரிடத்தை வாங்கி, நானும், என் மனைவியும் கடுமையாக உழைத்ததன் பலனாக இன்றைக்கு அது பசுமை பூமியாக மாறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் வந்து பார்வையிட்டுச் செல்கிறார் என்றால், அது எனக்குக் கிடைத்த மரியாதை இல்லை. உழைப்புக்கும், இயற்கை விவசாயத்துக்கும் கிடைத்த மரியாதை. நான் இதுவரை அரசின் உதவியை எதிர்பாராமல் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறேன். ஒரு முறை விவசாயிகள் கூட்டத்தில் அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ‘நாயுடு, விவசாயத்துல நீங்க மாசம் எவ்வளவு சம்பாதிக்கிறீங்க’ எனக் கேட்டார். நான், எனது உண்மையான வருமானத்தைச் சொல்லியிருந்தால், ‘விவசாயத்தில் இவ்வளவு லாபம் கிடைக்கிறது. எனவே, எல்லோரும் நாயுடுவைப் போல விவசாயம் செய்யுங்கள்’ எனச் சொல்லி விடுவார், அவர். அதனால், என்ன செய்வது என யோசித்து, ‘நமது மாநிலத்தில் உயர் பதவியில் இருக்கும் நேர்மையான அரசு ஊழியர் வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாக சம்பாதிக்கிறேன்’ என்று சொன்னேன். இயற்கை விவசாயத்தில் நிச்சயம் அந்தளவுக்கு சம்பாதிக்க முடியும் அதற்கு நானே உதாரணம்.

Images

நெற்பயிர் சாகுபடியில் அதிக அனுபவம் கொண்ட நான், எனக்குத் தெரிந்த யோசனைகளையும், கருத்துக்களையும் விவசாயிகளுக்குக் கற்றுத் தருகிறேன். நமக்குப் பின்னால் வரும் சந்ததிகளுக்கு, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இயற்கை விவசாயத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதனால்தான் என் பண்ணையில் மண்ணுக்குத் தேவையான இயற்கை இடுபொருட்களை இட்டு, விவசாயம் செய்துகொண்டு இருக்கிறேன். இயற்கை விவசாயத்தில் தேவையற்ற செலவுகள் குறைவு. முடிந்தவரை கலப்புப் பயிரை அதிகமாக பயிரிடுங்கள். ஏனெனில் ஒரு பயிர் கைவிட்டாலும், இன்னொரு பயிர் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும். விவசாயிகள் கடனாளியாகாமல் காப்பாற்றி விடும். இயற்கை விவசாயத்தில் முழுமனதுடன் ஈடுபட்டால் லாபம் அதிகம். அதைத் திறமையாகக் கையாள அதிகமானோருக்குத் தெரிவதில்லை.

இயற்கை விவசாயம் செய்த காலகட்டத்தில் எவ்வளவு விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர் என்று யோசியுங்கள். ஆனால், இப்போது அதிக அளவில் தற்கொலை நடப்பது ஏன்? கடந்த 50 ஆண்டுகளாக செயற்கை உரம் உபயோகிப்பதால், நிலம் மலடாக மாறிவிட்டது. இப்போது நிலத்தில் நுண்ணுயிரிகளே இல்லை. பிறகு எப்படி விவசாயம் செழிக்கும்?” என்ற நாகரத்தின நாயுடு, தொடர்ந்து விவசாயிகளின் சந்தேகங்களுக்குப் பொறுமையாக பதிலளித்தார்.

Images

தலைமையுரை ஆற்றிய பொன்னம்பல அடிகளார், “மனிதனை ஒருங்கிணைத்து நல்வழிப்படுத்தி புனிதமாக்குவது ஆன்மிகம். வாழ்வியலில் இயற்கையும், இறைவனும் ஒன்றுதான். இறைமை எங்கும் இருக்கிறது. அதேபோல் இயற்கையும் எங்கும் இருக்கிறது. அதைக் காப்பாற்றுவது நமது கையில்தான் இருக்கிறது. அதற்கு அனைவரும் இயற்கை விவசாயத்தைப் பின்பற்ற வேண்டும். அறிவியலாளர்கள் பரிணாம வளர்ச்சியை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, திருநாவுக்கரசர் போன்ற முன்னோர்கள் இயற்கையைப் பற்றி அதிகமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதை முறையாகக் கடைபிடித்து வந்தது வரை வில்லங்கம் இல்லை. இப்போது, அந்த இயற்கை வளம் முறையாக இல்லை.

இயற்கை சார்ந்து மட்டுமே நிலங்களைப் பிரித்தவன் தமிழன் மட்டும்தான். நம்மிடம் இருந்த நிலங்களுக்கேற்ற உணவும், அதற்கேற்ற உற்பத்தி முறையையும் மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். மண் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பாலை நிலமாகவே இருந்தாலும், அதை பசுஞ்சோலையாக மாற்றுவது விவசாயிகள் கையில்தான் இருக்கிறது. நாகரத்தின நாயுடு தனது வருமானத்தைப் பற்றி சொன்ன செய்திகள், விவசாயிகள் நெஞ்சில் இருத்த வேண்டியவை.

Images

தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் சென்றவர், நஞ்சை அமுதாக்கிய ஆழ்வார் நம்மாழ்வார். அவர், உலகின் ஒப்பற்ற வேளாண் விஞ்ஞானி. இயற்கை வழி விவசாயத்துக்குத் தேவையான ஏராளமான தொழில்நுட்பங்களையும், செய்திகளையும் நம்மிடையே விதைத்துச் சென்றுள்ளார். நெல்லைக் குறிப்பிட்டு, ‘அடி காட்டுல, நடு மாட்டுல, நுனி வீட்டுல’ என்பார். ‘மண்ணில் கொட்டுகிற ரசாயன உப்பு, இன்று மண்ணை மலடாக்கிவிட்டது. மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்ச் சங்கிலி இப்போது முழுமையாக இல்லை. அதை வளமாக்குவதற்கு இயற்கை விவசாயம் மட்டுமே முக்கிய தேவை’ என்பதை அழுத்தமாகச் சொன்னவர் நம்மாழ்வார். ஆக, சூழலுக்கு ஒத்துழைக்காத ரசாயனங்களை விலக்கி, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து, உண்பவர்களுக்கு நஞ்சில்லா உணவையும், உழவர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் பெற்று தரும் இயற்கை வழி விவசாயத்தைக் கைக்கொள்ளுவோம்’’ என்றார். அத்துடன் துவக்கவிழா நிறைவடைந்து.

கருத்தரங்கில் இடம்பெற்ற முன்னோடி விவசாயி உடுமலைப்பேட்டை பாலகிருஷ்ணன், சம்பங்கி விவசாயி திண்டுக்கல் மருதமுத்து, புளியங்குடி அந்தோணிசாமி, மஞ்சள் விவசாயி ராமகிருஷ்ணன், கரும்பு விவசாயி நடேசன் ஆகியோரின் அனுபவ உரைகள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வளம் குன்றா அங்கக வேளாண்மைத்துறை தலைவர், முனைவர் சோமசுந்தரம் ஆகியோர் ஆற்றிய உரைகள் உள்ளிட்ட நான்கு நாள் கருத்தரங்க உரைகள் அடுத்த இதழில்...

Images

கருத்தரங்கில் குவிந்த மக்கள்!

செப்டம்பர் 25 முதல் 28-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்ற கண்காட்சி, கருத்தரங்கில் 117 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என ஆர்வமுடன் வந்து கண்காட்சியைப் பார்வையிட்டு, கருத்தரங்கில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

பாரம்பர்ய விதைகள், இயற்கை இடுபொருட்கள், நாற்றுப் பண்ணைகள் என பல்வேறு அரங்குகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. கருத்தரங்கம் நான்கு நாட்களும் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது... வேளாண்துறை, அரசு அதிகாரிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அசத்திய பசுமை அரங்குகள்!

பன்னாட்டுக் கண்காட்சி, கருத்தரங்குகளில் குறிப்பிட்ட தலைப்புகளில் சிறப்பு அரங்குகள் செயல்படும். அது போன்ற சில அரங்குகளை இந்தக் கண்காட்சியில் ‘பசுமை விகடன்’ அமைத்திருந்தது.

நெல், வாழை, மஞ்சள் மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கான தனித்தனி அரங்குகள் அமைத்து, அங்கு முன்னோடி விவசாயிகள் அமர வைக்கப்பட்டனர். அவர்கள், குறிப்பிட்ட பயிர் தொடர்பாக விவசாயிகளுக்கு எழும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தினர். நெல், வாழை, மஞ்சள் மற்றும் கரும்பு அரங்குகளில் முறையே, முன்னோடி விவசாயிகளான மோகனசுந்தரம், நல்லசிவம், காந்தி மற்றும் நந்திவர்மன் ஆகியோர் நான்கு நாட்களும் அரங்கில் அமர்ந்திருந்து விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர். அதேபோல, இன்னொரு அரங்கில்... ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், பூச்சிவிரட்டி போன்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த படக்காட்சியுடன், முன்னோடி விவசாயி லோகநாதன் விளக்கியது, விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தென்னை, கரும்பு, சம்பங்கி, மஞ்சள், எலுமிச்சை... லாப பாடம் சொல்லும் அனுபவ விவசாயிகள்

Images

வறட்சியிலும் வாடாத தென்னை!

‘செலவைக் குறைக்கும் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில்... வறட்சியிலும் வாடாத தென்னைக்குச் சொந்தக்காரரும், மூடாக்கு வித்தைக்காரருமான முன்னோடி தென்னை விவசாயி ‘உடுமலைப்பேட்டை’ பாலகிருஷ்ணன் உரையாற்றினார். உரைக்கு முன்னதாக, அவரது தென்னந்தோப்பில் ‘ஜீரோ பட்ஜெட்’ முறையில் கடைபிடிக்கப்படும் தொழில்நுட்பங்கள் குறித்த படக்காட்சி திரையிடப்பட்டது. அது, நேரடியாக அவரது தோட்டத்துக்குச் சென்று வந்த அனுபவத்தை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியது.

“தென்னையில் ரசாயன உரத்தை விட ஜீரோ பட்ஜெட் முறையில் அதிக மகசூல் பெறலாம். தென்னை மரங்களில் கூடுதல் மகசூல் என்பது சரியான முறையில் மண்ணுக்கு நாம் கொடுக்கக்கூடிய இடுபொருட்கள் மூலம்தான் சாத்தியம். தென்னை மரங்களைச் சுற்றி மூடாக்குப் போட்டு, சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதன் மூலம் வறட்சி காலங்களில் தென்னை மரங்கள் மடிவதைத் தடுக்கலாம். ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தில் இடுபொருட்களுக்கு அதிக செலவு செய்யத் தேவையில்லை. காய்ந்த மட்டைகளில் உள்ள இலைகளை எடுத்து வயல் முழுக்க மூடாக்கு போல பரப்பி வைப்பது; மரத்தின் வெளிச்சுற்றில் பாசனம் செய்வது, இவை இரண்டும்தான் முக்கியமானவை.

மூடாக்கு இடும்போது, அனைத்து நுண்ணுயிரிகளும் உயிர்ப்புடன் இருக்கும். அதோடு, மண்ணில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். ஈரப்பதம் இருப்பதால் மண்புழுக்கள் அதிகளவில் இருக்கும். அவை கீழும், மேலும் மண்ணை உழுது காற்றோட்டத்தை அதிகப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. இதனால், மரங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து ஜீவாமிர்தம் பயன்படுத்தும்போது, சிறப்பான மகசூல் கிடைக்கிறது” என்ற பாலகிருஷ்ணன், தொடர்ந்து விவசாயிகளின் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் அளித்தார்.

Images

ஆண்டுக்கு `5 லட்சம் சாத்தியமே!

25-ம் தேதி மதிய அமர்வில் முதலாவதாக மேடையேறினர், திண்டுக்கல் மாவட்டத்தில் சம்பங்கி சாகுபடியில் கலக்கி வரும் மருதமுத்து-வாசுகி தம்பதி. “பொதுவாக பூக்களைப் பயிரிடும்போது, ‘பூக்களின் விலை நாளுக்கு நாள் ஏறி, இறங்கக்கூடியது. அதில் எப்படி லாபம் பார்க்க முடியும்?’ என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. ஆனால், உண்மையில் பூ சாகுபடி பல விவசாயிகளைக் கடனில் இருந்து காப்பாற்றி இருக்கிறது, மாதந்தோறும் நிச்சய வருமானத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ‘சம்பங்கி சாகுபடியில் 60 சென்ட் நிலத்தில் ஒர் ஆண்டில் 5 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கிறேன்’ என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. காரணம், நான் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றுகிறேன்.

மண்ணுக்குத் தொழுவுரம் இட்டு வளமேற்றுவது முதல் விதைக்கிழங்கை நடவு செய்வது வரை முறையான தொழில்நுட்பங்களை சரியான முறையில் செய்ய வேண்டும். அதில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட நீங்கள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது. இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு... வயலைச் சுற்றிலும் மரவகைப் பயிர்களை நட்டு சம்பங்கியைப் பாதுகாத்து வந்தால், ஓர் ஆண்டில் ஐந்து லட்சம் நிச்சயம் சம்பாதிக்கலாம்” என்ற மருதமுத்து, ‘கரூர்’ மனோகர், ‘திருநெல்வேலி’ சுப்பிரமணி உள்ளிட்ட சில வெற்றிகரமான சம்பங்கி விவசாயிகளையும் மேடையில் அறிமுகப்படுத்தினார். சம்பங்கி மூலம் மாதம் குறிப்பிட்ட தொகை நிச்சய வருமானமாகக் கிடைப்பதை அவர்கள், பகிர்ந்துகொண்டது, விவசாயிகளையும் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

கரும்புக்கு ஏற்ற ரெயின் கன் பாசனம்!

அடுத்ததாக கரும்பு சாகுபடி பற்றிப் பேசிய திருச்செங்கோடு நடேசன், “சொட்டுநீர்ப் பாசனத்தில் ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் ஆகிய இயற்கை இடுபொருட்களைக் கலந்து விடும்போது, குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வாய்க்கால் வழிப்பாசனத்தில் இவற்றைக் கலந்தாலும் கடைசிப்பகுதி வரை சீராகப் பாயாது. இதற்கான தீர்வுதான் ரெயின்கன். இதை நாமே சுலபமாக அமைத்துக் கொள்ளலாம். அதிக செலவு பிடிக்காது. நீர் மூழ்கி மோட்டாராக இருந்தால், 250 லிட்டர் பேரலில் அமுதக்கரைசல் அல்லது ஜீவாமிர்தத்தை வைத்து விட்டால், எல்லா பகுதிகளுக்கும் சீராகவும், சமமாகவும் பாயும். ரெயின் கன் மூலம் தண்ணீர் பாய்ச்சினால், 100 அடி தூரம் வரை தண்ணீர் பாயும். நான், 8 மாதம் வரையிலும் கரும்பை ரெயின் கன் நீர்ப்பாசனம் மூலமாகத்தான் வளர்க்கிறேன். ரெயின் கன் மூலம் தண்ணீரை மேலிருந்து தெளிப்பதால் இலைகுருத்துப் புழு, குருத்துக்கட்டை ஆகியவை வராது. கரும்பும் உயரமாக வளர்வதால் நல்ல மகசூல் கிடைக்கும் இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.

கரும்பில் உரிக்கும் தோகையை அப்படியே கரும்பின் மூட்டிலேயே வைத்து விடுவேன். அவை அப்படியே மண்ணோடு மட்கி விடும். தோட்டத்தை விட்டு எதுவுமே வெளியே போகக்கூடாது. கரும்பில் தொடர்ந்து இதுவரை 10 முறை கரும்பு வெட்டியிருக்கிறேன். 11-ம் மறுதாம்பு வயலில் இருக்கிறது. இதுவரை ஏக்கருக்கு சராசரியாக 60-லிருந்து 70 டன் மகசூல் கிடைத்திருக்கிறது. ரெயின் கன் மூலம் தண்ணீர் வேகமாவும், பரவலாவும் பிரிந்து போகும்போது தண்ணீரில் உள்ள உப்புச்சத்து குறைவதுடன், காற்றில் உள்ள நைட்ரஜனும் கிரகிக்கப்படுகிறது. கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் கூட இவ்வகை நீர்ப்பாசனம் மூலம் அதிக மகசூல் எடுக்கலாம். கரும்பைப் பொருத்தவரை வாய்க்கால் வழிப் பாசனம், சொட்டுநீர்ப் பாசனத்தை விடவும் ரெயின்கன் பாசனம் சிறந்தது” என்றார்.

Images

ஊடுபயிரில் சிறக்கும் மஞ்சள்!

தொடர்ந்து பேசிய பெரம்பலூரைச் சேர்ந்த மஞ்சள் விவசாயி ராமகிருஷ்ணன், “ஜீரோ பட்ஜெட் முறையில் மஞ்சள் சாகுபடி செய்ய விதைநேர்த்தி அவசியம். பீஜாமிர்தத்தில் விதைக்கிழங்கை நனைத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். மண்ணுக்கு நாட்டு மாட்டு சாண உரமிடுதல் முக்கியம். தொடர்ந்து, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா என இயற்கை உரங்களைக் கொடுத்தால், மகசூல் குறைய வாய்ப்பே இல்லை. பல்லடுக்கு முறை மஞ்சள் சாகுபடி குறைந்த செலவில் அதிக லாபத்தைத் தரும்.

வயலைச் சுற்றிலும் தென்னை, முருங்கை போன்ற மர வகைகளையும், அடுத்த அடுக்காக ஆமணக்கு போன்ற பயிர்களையும், தட்டைப்பயறு, வெங்காயம் போன்ற பயிர்களை ஊடுபயிராகவும் மஞ்சள் சாகுபடியில் விதைக்கலாம். இயற்கை விவசாயத்தில் மூடாக்கும், நீர்ப் பாசனமும் மிகவும் முக்கியம். தென்னை நார்க் கழிவுகளை மூடாக்காகப் பயன்படுத்தலாம். சொட்டுநீர்ப் பாசனம் செய்தால் அதிக நீர் செலவு இருக்காது. இயற்கை விவசாயத்துக்கு 50% காற்று மிக அவசியம். திட்டமிட்டுச் செய்தால் இயற்கை விவசாயம் ஒரு எளிதான முறையாகத்தான் இருக்கும்” என்றார்.

நான் உணவில் பணக்காரன்!

தொடர்ந்து, ‘லாபம் கொடுக்கும் மண்வளக்கலை’ என்ற தலைப்பில் பேசிய முன்னோடி விவசாயி ’புளியங்குடி’ அந்தோணிசாமி, “வருஷத்துக்கு 5 லட்ச ரூபாய் வரைக்கும் ரசாயன உரம் வாங்கிப் போட்டவன் நான். ஒரு கட்டத்துல விளைச்சலே இல்லாம அதிக நஷ்டம் ஏற்பட்டதும், மண்ணைப் பரிசோதனை செஞ்சுப் பாத்ததுல மண்ணுல எந்த சத்துமே இல்லைனு சொன்னாங்க. அதுக்குக் காரணம் ரசாயன உரம்தான்னு தெரிஞ்சது. உடனே இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். ‘உன் புருசனுக்கு புத்தி கெட்டுப்போச்சா?. சாணியையும், கோமியத்தையும் கலக்கி ஊத்திக்கிட்டு இருக்கானே இப்படிச் செஞ்சா எப்படி விளைச்சல் வரும்?’னு என் மனைவிகிட்ட எல்லாருமே கேலி பேசுனாங்க. ஆனா, அந்த வருஷம் மற்ற ரசாயன விவசாயிகளைவிட எனக்குத்தான் மகசூல் அதிகமா கிடைச்சுது.

Images

இயற்கை விவசாயத்துக்கு நான் முழுமையா மாறி முப்பது வருசத்துக்கு மேல ஆகுது.

மேற்குத்தொடர்ச்சி மலைகள்ல வளரும் எலுமிச்சை மரங்களிலுள்ள விதைகளை என்னோட தோட்டத்தில் முளைக்க வைத்து அதை தாய்ச்செடியா வைச்சி, நாட்டு ரக செடிகளை ஒட்டுக்கட்டி புதுரக எலுமிச்சையைக் கண்டுபிடிச்சிருக்கேன். வழக்கமா நாட்டு எலுமிச்சை 5 வருஷத்தில் காய்ப்புக்கு வரும். ஆனா, இந்த ஒட்டு எலுமிச்சை இரண்டரை வருஷத்தில் காய்ப்புக்கு வந்துடும். வெளி இடுபொருள் ஏதும் கொடுக்கிறதில்லை. வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியையே உரக்கிடங்காக்கியிருக்கேன். அதுல, சணப்பு, தக்கைப் பூண்டு விதைச்சு, 40 நாள்ல பூக்குற பருவம் வந்ததும், மடக்கி விட்டுடுவேன். நாலாவது மாசம் கரும்புத் தோகையை உரிச்சு, அதையும் போட்டுடுவேன். அதெல்லாம் மட்கி உரமாயிடும்.

24 வருஷத்துக்கு முன்னாடி நட்ட கரும்பில இருந்துதான் இன்னிக்கும் அறுவடை செஞ்சுக்கிட்டிருக்கேன். மறுதாம்பு வந்துக்கிட்டே இருக்கு. ஏக்கருக்கு 60 டன்ல இருந்து 70 டன் வரை மகசூல் எடுக்கிறேன். என்னோட கரும்பு வயல்ல இருக்குற மண்ணோட அங்ககத் தன்மையைப் பார்த்துட்டு பல நாட்டு விஞ்ஞானிகள் ஆச்சர்யப்பட்டுப் போயிருக்காங்க. ஆரம்பத்துல எங்கிட்ட இருந்த 50 ஏக்கருக்கு ரசாயன உரத்துக்காக நான் செலவழிச்ச லட்சக்கணக்கான ரூபாய்க்கு கணக்கே இல்ல, ஆனா, இப்போ எங்கிட்ட இருக்கிற நூத்துக்கணக்கான ஏக்கருக்குமே ஒரு வருஷத்துக்கு இயற்கை உரம், இடுபொருள் செலவே ஒரு லட்ச ரூபாயைத் தாண்டாது.

ரசாயன உரம் போட்டு மண்ணோட வளத்தைக் கெடுத்ததெல்லாம் போதும். இனியாவது ரசாயனத்தை விட்டுட்டு இயற்கைக்கு மாறுங்க. பணத்துல நான் ஏழையா இருக்கலாம். ஆனா, உணவுல நான்தான் பணக்காரன். நினைச்சா தூயமல்லி, மாப்பிளைச்சம்பா, அறுவதாம் குருவை...னு பாரம்பர்ய அரிசி சாப்பாடு சாப்பிடுவேன். கேப்பை, கம்பங்கஞ்சி குடிப்பேன். ஒண்ணும் இல்லாட்டா பழைய சாதம் இருக்கு. இன்னைக்கு எந்த ஹோட்டல்லய்யா பழைய சாதம் கிடைக்குது?. இயற்கை விவசாயத்துக்கு மட்டும் மாறினா போதாது, உணவுலயும் மாறும்போதுதான் முழுமையான பலன் கிடைக்கும்ங்கிறதை அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன்யா. அங்ககம்கிறது... விவசாயத்துல மட்டும் இல்ல... உணவுலயும்தான்’’ என்று அந்தோணிசாமி சொல்லி முடிக்கும்போது, கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.

‘இயற்கை விவசாயமே சிறந்தது!’ இயற்கைக் கொடி பிடிக்கும் வேளாண்மை அதிகாரிகள்!

Images

உயிர்ச்சங்கிலியை உடைக்காமல்

25-ம் தேதி மதிய அமர்வில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வளம்குன்றா அங்கக வேளாண்மைத்துறைத் தலைவர், முனைவர்.சோமசுந்தரம் பேசியபோது... “நாம் முதலில் மண்ணில் உள்ள உயிரிகளின் நுண் கட்டமைப்பு பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு சதுர மீட்டர் மண்ணில் 18 முதல் 20 லட்சம் நூற்புழுக்கள், ஒரு லட்சத்து இருபதாயிரம் கரையான் உண்ணிகள், 10 ஆயிரம் ஸ்பிரிங்டைல் பூச்சிகள், 5 ஆயிரம் எறும்புகள், 200 முதல் 2 ஆயிரம் மண்புழுக்கள், 50 முதல் 5 ஆயிரம் வரை நத்தை இனங்கள், ஆயிரம் பறக்கும் பூச்சிகள் மற்றும் 750 முதல் 1000 வரை பூரான், அட்டை போன்ற ஊர்வன என இருக்கின்றன. ஒரு ஏக்கர் மண்ணில் 407 கிலோ மண்புழுக்களும், 678 கிலோ பாக்டீரியா மற்றும் பூஞ்சணங்களும் இருக்கின்றன.

பயிர் வளர்ச்சிக்கு சத்துக்கள் அதிகமாகத் தேவை. இயற்கை உரம் எது, செயற்கை உரம் எது என கீழே இருக்கும் வேருக்குத் தெரியாது. வேருக்கு தனிம வடிவத்தில் சத்துக்கள் கிடைக்க வேண்டும், அவ்வளவுதான். அங்கக மண்ணில் 16 முதல் 20 வகையான சத்துக்கள் இருக்கின்றன. ஒரு நெல்லை பகுப்பாய்வு செய்து பார்த்தால், அதில் குறைந்தது 16 சத்துப்பொருட்கள் இருக்கும். பயிர்களுக்கு கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூன்றும் மிக முக்கியம். சாதகமான காற்றோட்ட மண்டலம் ஒரு பயிருக்கும், மண்ணுக்கும் மிகமிக அவசியம். மண் கட்டமைப்பு, நீர்ப்பிடிப்புத் திறன், காற்றோட்டம் இவை மூன்று பண்புகளும் மண்ணுக்கு மிகவும் முக்கியம். அங்கக மண்ணில் 60% காற்றோட்டம், 40% நீர் என இருந்தால், அது வளமான மண்ணாகும்.

Images

ரசாயன பண்புகளைத் தவிர்ப்பதற்கு 100% அங்கக மண் வகை இருக்க வேண்டும். ரசாயன உரம் போடும்போது மண்ணில் உள்ள மணி, சாம்பல் சத்துக்களும் காற்றில் இருக்கும் தழைச்சத்தும் முழுமையாகப் பயிருக்குக் கிடைக்காது. உரம் பயிருக்கு கிடையாது. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளுக்குத்தான் உரமிட வேண்டும். உயிரியல் முறையில் சத்துக்கள் கொடுக்கப்பட வேண்டும். அதற்கு, மண் வளத்தை அங்கக முறைப்படி மாற்ற வேண்டும். மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் உயிர்ச்சங்கிலியை உடைக்காமல் அதன் வளத்தைப் பாதுகாப்பது மிகவும் நல்லது. விவசாயிகளின் கவனம் முழுக்க இயற்கை விவசாயத்திலும், அங்கக முறைப்படி சத்துக்களை கொடுப்பதிலும்தான் இருக்க வேண்டும்” என்றார்.

முடிந்தவரை இயற்கை உரங்கள்!

26-ம் தேதி காலை அமர்வுக்கு வருகை தந்திருந்த ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கார்த்திகேயன், “நாம் என்றைக்கு ராகி, கம்பு போன்ற நம்முடைய பாரம்பர்ய விவசாயத்தை மறந்தோமோ... அப்போதே நம்முடைய வாழ்வியலை விட்டு விலகி விட்டோம். அதனால்தான் இன்றைக்கு நிலத்தில் ரசாயன உரங்களைக் கொட்டி பயிர்களை விளைவிக்கிறோம். முதியவர்கள், 70 வயதில் கூட கடினமான வேலைகளை சுலபமாக செய்கிறார்கள். ஆனால், இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு மூன்று மாடி ஏறுவதற்குள் மூச்சு வாங்குகிறது.

ஒரு மனிதனுக்கு குடிநீரும், காற்றும் மாசுபடாமல் கிடைக்க வேண்டும். ஆனால், நாம் இரண்டையும் மாசுபடுத்திக் கொண்டு இருக்கிறோம். நம்மிடையே வளமான மண்வளம் இருக்கிறது. அதற்கு என்ன வேண்டுமோ, அதை மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்கு எதிராக ஏதாவது செய்தால் நம்மையே மீண்டும் எதிர்க்கும். முடிந்தளவு இயற்கை உரங்களைப் பயன்படுத்துங்கள்” என்றார்.

Images

அதிக மழையிருந்தும், தண்ணீர் பஞ்சம் ஏன்?

திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப்பகுதி வேளாண்மைப் பொறியாளர், பிரிட்டோ ராஜ், “ஆரம்ப காலங்களில் ‘இந்தப் புரட்சி’, ‘அந்தப்புரட்சி’ என்ற நோக்கத்தில் இந்தியாவைக் கொண்டு சென்றதால், வந்த விளைவுதான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் பஞ்சம். அது பயனளித்த விதமும் சற்றே சோகமானது. மழைக்காலங்களும், மழை நாட்களும் இப்போது பொய்த்துவிட்டன. வீட்டின் குடிநீர்த் தேவைக்கு மட்டுமே தண்ணீரைப் பற்றி பெரும்பான்மை மக்கள் கவலைப்படுகிறார்கள். ஆனால், விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை என்றால் அவ்வளவாக கவலைப்படுவதில்லை.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஹோட்டல் விலைப்பட்டியலில் தண்ணீர் முதலிடம் பிடித்துவிடும். அந்த அளவுக்கு மோசமாகப் போய்க்கொண்டு இருக்கிறது, தமிழ்நாட்டின் தண்ணீர் ஆதாரம். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 575 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. 400 மில்லி மீட்டர் மழை இருந்தாலே விவசாயத்தைக் காப்பாற்றி விட முடியும். ஆனால், அதை விட அதிக மழை கிடைத்தும் நீர் பஞ்சம் ஏன் வருகிறது? தண்ணீர் செல்லும் ஓடைகளையும், குளங்களையும் முறையாகப் பராமரிக்காமல் விட்டதுதான் காரணம்.

வேளாண்மைக்கு அடிப்படை நீர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு 300 முதல் 350 அடிக்குள் தண்ணீர் கிடைத்தது. தற்போது 1,200 அடிக்கு மேல் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது. நிலத்தடி நீரை அதிகரிக்க வேண்டுமானால், மழை நீரை பூமிக்குள் கொண்டுபோக வேண்டும். இதற்கு மழைநீர்ச் சேமிப்பு அவசியம். போர்வெல்லுக்குப் பக்கத்தில் மழை நீரைக் கொண்டு சென்றால் மழை நீரானது பூமிக்குள் எளிதாக இறங்கிவிடும். பொதுவாக, முதல் ஊற்று 42 அடியில் கிடைக்க ஆரம்பிக்கிறது, கடைசி ஊற்று 550 அடியில் கிடைக்கிறது. ஒவ்வொரு ஊற்றும் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இருந்திருக்கிறது. ஆனால், அந்த நீர்வளம் இப்போது இல்லை. இதனால் பூமியில் தண்ணீரை அதிகப்படுத்துவது அவசியம். விவசாயிகள் தண்ணீரை அரசிடம் கேட்க வேண்டாம். உங்கள் நிலங்களில் பண்ணைக்குட்டை, நீர்த்தேக்கங்களை அமைத்தாலே போதும். நிலத்தடி நீர் பெருகிவிடும்” என்றார்.

Images

நீங்களே விலை நிர்ணயிக்க வேண்டும்!

தொடர்ந்து பேசிய திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பந்தல் காய்கறி முன்னோடி விவசாயி ‘கேத்தனூர்’ பழனிச்சாமி, “விவசாயிகளின் காய்கறிகளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயிக்க வேண்டும். அதற்கு இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே முடியும். என்னுடைய நிலத்தில் பீர்க்கங்காய் ஒரு கிலோ 35 ரூபாய் என்றால், அந்த விலைக்குத்தான் மக்கள் வாங்க வேண்டும். விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட வேண்டும். விளைவிக்கும் காய்கறிகளின் தரம் மிகவும் முக்கியம். எல்லா மாவட்டத்திலும் எல்லா காய்கறிகளையும் விளைவிக்கலாம். முக்கியமாக நடவு செய்வதற்கு முன் விதைநேர்த்தி முக்கியம்.

இயற்கை விவசாயத்தில் பயிர் செய்தால் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலம் வளமாக மாறிவிடும். பண்ணைக்கு வெளியே இடுபொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள். பஞ்சகவ்யா, அரப்பு-மோர்கரைசல், ஜீவாமிர்தம் என எல்லாவற்றையும் நீங்களே தயார் செய்து பயன்படுத்துங்கள். விவசாய நிலத்தில் நாட்டுமாடுகள் வளருங்கள். உங்களுக்கு தேவையானவற்றையும் மாடுகளின் மூலம் பெற முடியும். இதுதான் விவசாயத்தில் வெற்றிக்கான வழி” என்றார்.

“செலவு குறைந்த பாரம்பர்ய முறைகள் இருக்க, கடனில் தள்ளும் ரசாயனங்கள் எதற்கு?”

Images

சாம்பல் இருக்க பயமேன்!

26-ம் தேதி மதிய அமர்வில், கோவில்பட்டி மண்வள ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் அலுவலர் நீ.செல்வம் பேசியபோது... “செடிகள்ல பூச்சிகளைப் பார்த்தவுடனேயே கடைக்குப்போய் ரசாயனப் பூச்க்கொல்லியை வாங்கி தெளிக்கிறதுதான் விவசாயிகள் செய்ற பெரிய தவறு. தொடுநஞ்சு, குடல்நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, புகைநஞ்சு, நரம்புநஞ்சு என மொத்தம் அஞ்சு வகைப் பூச்சிக்கொல்லிகள் இருக்கு. இந்த அஞ்சு வகைகளையும் நாம உபயோகப்படுத்திட்டோம். இந்தியாவில இப்போ அதிகமா விற்பனையாகிறது, ஐந்தாம் தலைமுறைப் பூச்சிக்கொல்லியான நரம்பு நஞ்சுதான். விதையிலேயே பூச்சிக்கொல்லியைத் தெளித்து விற்பனை செய்றாங்க. ஆனாலும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியலைங்கிறதுதான் உண்மை. என்ன காரணம்னா... பூச்சிக்கொல்லியை திரும்பத் திரும்ப பூச்சிகள் மேல தெளிக்கிறப்போ, பூச்சிகளோட உடம்புல எதிர்ப்புத்தன்மை உருவாகிடுது. அதனால, பூச்சிக்கொல்லிகள் விஷமா இல்லாம, பூச்சிகளுக்கு டானிக்காக மாறிடுது. நாம அடிக்குற பூச்சிக்கொல்லிகள் மண்ணுலயும் விழறதால மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் செத்துப் போகுது.

நெற்கதிர்கள்ல பால் பிடிக்கிற சமயத்துல கதிர் நாவாய்ப்பூச்சி தாக்கும். அப்படிப்பட்ட சமயத்துல அடுப்புச்சாம்பலை வயல்ல தூவி விடுறதைத்தான் வழக்கமா வெச்சிருந்தோம். பூச்சிகள் கட்டுப்பட்டுடும். ஆனா, இப்போ அதை மறந்துட்டு வீரியமான பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கிறோம். அது நெற்கதிர் முழுக்க பட்டுடும். அறுவடை செய்த பிறகு வைக்கோலை மாட்டுக்குக் கொடுக்கிறோம். வைக்கோல் மூலமா மாட்டு உடம்புக்குள்ள நஞ்சு போகுது. அப்போ அது கொடுக்கிற பாலும் நஞ்சாகிடுது. பூச்சிகளை அழிக்க தெளிக்கிற விஷம் இப்படித்தான் மறைமுகமா மனிதனையும் பாதிக்குது.

Images

களைக்குப் பயந்தால் விதைக்க முடியாது, பூச்சிகளுக்குப் பயந்தா விவசாயமே செய்ய முடியாது. பூச்சிகள் எல்லாமே கெட்டது செய்றதில்ல. நல்லது செய்ற பூச்சிகளும் இருக்கு. பயிரைத் தாக்குற கெட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தணும்னா நல்லது செய்யுற பூச்சிகள் வயல்ல இருக்கணும். ஆனா, பூச்சிக்கொல்லி தெளிக்கிறப்போ அவ்வளவு பூச்சிகளும் அழிஞ்சிடும்.

வயலைச் சுத்தியும், ஊடுபயிரா தட்டைப்பயறை விதைச்சு விட்டா அசுவினிப் பூச்சிகள் தட்டையில் வந்து உட்காரும். அதைச் சாப்பிட இன்னொரு பூச்சி வரும். அதனால இயற்கை முறையில பூச்சிக் கட்டுப்பாடு நடந்துடும். வரப்பு ஓரங்கள்ல ‘கொட்டமுத்து’னு சொல்ற ஆமணக்கை 8 அடி இடைவெளியில நட்டு... செடி வளர்ந்ததும் வாரம் ஒரு தடவை அதன் இலைகளைக் கசக்கி விடணும். அப்படி செய்துட்டா பூச்சிகள் பக்கத்துல வராது. சூரியகாந்தியும், செண்டுமல்லியும் கூட நட்டு வைக்கலாம். இதுக்கும் மேல, பூச்சிகள் வந்தா... வேப்பங்கொட்டைக் கரைசல், இஞ்சி-பூண்டுக் கரைசல், இனக்கவர்ச்சிப்பொறிகள், விளக்குப்பொறிகள்னு பயன்படுத்தலாம். ரசாயன பூச்சிக்கொல்லிகள் தேவையேயில்லை. முதல்ல நமக்கு பூச்சிகளைப் பத்தின புரிதலை உண்டாக்கிட்டா போதும். பயப்படாம விவசாயம் செய்யலாம்” என்று அழகாக எடுத்துச்சொன்னார்.

Images

பாறையாகி வரும் மண்!

தொடர்ந்து பேச மேடையேறினார், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த ‘முன்னோடி இளம் விவசாயி’ பரத். மேஜையில் 4 கண்ணாடிக் குடுவைகளையும் ஒரு செங்கலையும் வைத்து விட்டு, ‘பயம் இல்லாத விவசாயி யாராவது ஒருத்தர் மேடைக்கு வாங்க’ என்று பரத் சொல்ல, ஒரு விவசாயி மேடை ஏறினார். ஒரு கண்ணாடிக் குடுவையிலுள்ள மண்புழுவை எடுத்து உப்பு நிரப்பப்பட்ட இன்னொரு கண்ணாடிக் குடுவைக்குள் போடுமாறு அந்த விவசாயியிடம் சொன்னார் பரத். மண்புழு உப்பில் விழுந்ததும் நெளிந்து சுருண்டு விட்டது. உடனே அதை எடுத்து வெளியில் விட்ட பரத், “இன்னும் கொஞ்ச நேரம் விட்டோம்னா இந்த மண் புழு செத்துடும். இப்படித்தான் மண்புழுக்கள் அதிகம் இருந்த வளமான மண்ணை நாம், ரசாயன உரம்கிற உப்பைத் தூவித் தூவி மலடாக்கிட்டோம்” என்றதும் கைத் தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

தொடர்ந்து பேசியவர், “இந்த மேஜையில் 4 கண்ணாடிக் குடுவைகளும் ஒரு செங்கலும் இருக்கு. முதல் குடுவையில் முழுமையாக மட்கிய உரம் கலந்த மண், இரண்டாவது குடுவையில் உப்பு, மூன்றாவது குடுவையில் மண்புழுக்கள், நான்காவது குடுவையில் வளம் இழந்து வரும் தற்போதைய நிலையில் உள்ள மண் இருக்கு. ரசாயன உரங்கள் அதிகப்படியாக பயன்படுத்துவதால் நுண்ணுயிர்களும், மண்புழுக்களும் செத்துப் போயிடும். தொடர்ச்சியாக ரசாயன உரம் போட்டுக்கிட்டே இருந்தால் மண், பாறை போல மாறிடும். அதை உணர்த்தத்தான் ஐந்தாவதாக செங்கல் வைத்திருக்கேன். மண் வளமாக இருந்தால்தான் பயிர் வளரும். பயிர் வளர்ந்தால்தான் பூச்சிகள் வரும். பூச்சிகள் வந்தால்தான் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தறதுக்கான வழியை யோசிக்க முடியும். அதனால, முதல்ல மலடாகி வருகிற மண்ணை வளமாக்கணும்.

காய்கறி, கீரைகளில் பூச்சி மேலாண்மை!

நான் கீரை, காய்கறிகளை சாகுபடி செய்துக்கிட்டு இருக்கேன். கீரைகள்ல மாவுப்பூச்சியும், இலையைத் தின்னும் பூச்சிகளும்தான் அதிகமா வரும். குறிப்பா, சிறுகீரையில்தான் அதிகமான பூச்சித்தாக்குதல் இருக்கும். ஒரே வகையான கீரைகளை நடாமல் பொன்னாங்கன்னி, அரைக்கீரை, பசலை, சிறுகீரைனு கலந்து நட்டால் பூச்சித்தாக்குதல் பரவலைத் தடுக்கலாம். கீரை நடவு செய்த 7-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி பஞ்சகவ்யாவும், 12-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமினோ அமிலம்னு கலந்து தெளிச்சாலே போதும் பூச்சிகள் வராது.

காய்கறிகள்ல கத்திரியில மட்டும் 21 வகையான பூச்சிகள் வரும். இதுல 4 பூச்சிகள் மட்டும்தான் நன்மை செய்ற பூச்சிகள். மற்றவை எல்லாமே விளைச்சலைப் பாதிக்கிற பூச்சிகள். கத்திரி நடவு செய்த 40-ம் நாளுக்கு மேல தண்டுத் துளைப்பான் தாக்கும். அதனால செடிகளோட வளர்ச்சி பாதிக்கப்படும். பொறிவண்டு, இலைகள்ல முட்டை வெச்சுடும். அதுல வெளி வர்ற வண்டுகள் இலையில இருக்கிற பச்சையத்தைச் சாப்பிட்டுடும். அதனால, இலை சல்லடை போல மாறி செடியோட வளர்ச்சி குறையும். செடியை நட்ட 15-ம் நாள்ல இருந்து, 15 நாளுக்கு ஒரு தடவை, சாண வறட்டி சாம்பலை சலிச்சு காலை நேரத்துல (6 முதல் 7 மணிக்குள்) தூவணும். இலை மேல சாம்பல் ஒட்டிக்கிறதால இலையை பூச்சி சாப்பிடாது. அப்படியே சாப்பிட்டாலும் சாம்பல் வயித்துக்குள்ள போய் பூச்சி இறந்துடும். இது, பாரம்பர்யமா நாம செஞ்சதுதான். ஆனா, நாமதான் மறந்துட்டோம். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ சாம்பல் போதுமானது.

வெண்டை நட்ட 15-ம் நாள்ல 10 லிட்டர் தண்ணீர்ல 150 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி; 30-ம் நாள் 10 லிட்டர் தண்ணீர்ல 200 மில்லி பஞ்சகவ்யானு தெளிக்கணும். 15 நாளுக்கு ஒரு முறை இப்படி மாறி மாறி தெளிச்சா, பூச்சிகள் கிட்டயே வராது. பூக்கிற நேரத்தில் ஒரு லிட்டர் இளநீருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிச்சா பூக்கள் அதிகமா பூக்கும். இளநீரை ரோஜா, சம்பங்கி, மல்லினு பூக்களுக்கும் தெளிக்கலாம். நான் சொன்ன எல்லாமே என்னோட அனுபவத்துல செய்து பார்த்துட்டுதான் சொல்றேன்” என்றார்.

Images

விவசாயி வைத்தியனாகணும்!

தொடர்ந்து தஞ்சாவூர், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தின், தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர்.புண்ணியமூர்த்தி பேசினார். “பல வருஷங்களா நானும் எல்லா கால்நடை மருத்துவர்களையும் போலதான் ஆங்கில மருத்துவ முறையில வைத்தியம் செய்துக்கிட்டு இருந்தேன். 2000-ம் வருஷம்தான் பாரம்பர்ய மூலிகை வைத்தியம் குறித்த ஆய்வில் ஈடுபட்டேன். 2001-ம் வருஷம், பெங்களூருல பாரம்பர்ய மருத்துவப் பேரவை சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்துக்கிட்டேன். அங்கதான், கால்நடைகளுக்கான பாரம்பர்ய மூலிகை வைத்தியம் குறித்த எல்லா தகவல்களையும் சேகரித்தேன்.

‘நமது சித்தர்களும், முன்னோர்களும் சொல்லிச் சென்ற சாதாரண மூலிகைகள்தானே இதெல்லாம். இது தெரியாம இவ்வளவு நாள் கால்நடைகளுக்கு ஊசி, மருந்து, மாத்திரைனு கொடுத்து வைத்தியம் பாத்திருக்கோமே’னு வருத்தமாகிடுச்சு. 2002-ம் வருஷம் ஜனவரியில் இருந்து கால்நடைகளுக்கு மூலிகை வைத்தியம் மட்டும்தான் பார்க்கணும்னு ஆசைப்பட்டு மூலிகை வைத்தியரா மாறினேன்.

ஆடு, மாடுகளுக்கு சின்னப் பிரச்னைனா கூட உடனே கால்நடை மருத்துவர்கிட்ட ஓடக்கூடாது. ‘விவசாயி எப்படி வியாபாரியாக மாறணுமோ... அதே போல கால்நடைகளை வைத்திருக்கிற விவசாயி வைத்தியனா மாறணும். அதாவது, நம் முன்னோர்கள் சொல்லி வைத்த பாரம்பர்ய மூலிகை வைத்தியத்தைக் கத்துக்கணும். அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய வியாதிகளைத் தவிர, எல்லா நோய்களுக்குமே பாரம்பர்ய மருத்துவத்தில் தீர்வு இருக்கு.

தஞ்சாவூர்ல 13 வருஷமாக செயல்பட்டு வர்ற கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் மூலிகை மருத்துவம்தான் செய்றோம். தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தில் முதல் முயற்சியா ஆரம்பிக்கப்பட்ட கால்நடைகளுக்கான மூலிகை வைத்திய பட்டயப் படிப்புல முதல் பேட்சுல சேர்ந்த 36 மாணவர்கள், இப்போ படிப்பை முடிக்கப் போறாங்க” என்ற புண்ணியமூர்த்தி, சில முக்கிய நோய்களுக்கான வைத்திய முறைகளையும் சொன்னார்.

Images

நூற்புழுவுக்கு சுலபமான தீர்வு!

கண்காட்சியில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் ஆகிய பயிர்களுக்குத் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த அரங்குகளில் முன்னோடி விவசாயிகள், சம்பந்தப்பட்ட பயிர்கள் தொடர்பான விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். இது, விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வாழை அரங்கில் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்த முன்னோடி விவசாயி நல்லசிவம் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“ஒரு சாதாரண விவசாயினு அறியப்பட்ட என்னை, வல்லுநரா உட்கார வெச்சு... வாத்தியாரா மாத்திடுச்சு, ‘பசுமை விகடன்’. கண்காட்சிக்கு வந்த ஊர்க்காரங்க எல்லாம், நம்ம நல்லசிவம் இவ்வளவு நல்லா பேசுறாரேனு ஆச்சர்யப்பட்டுப் போனாங்க. எல்லா புகழும் பசுமை விகடனுக்குதான்னு பெருமையா சொன்னேன்.’’

கரூர், குளித்தலை, ஈரோடு, மேட்டுப்பாளையம்னு வாழை வெள்ளாமை அதிகம் இருக்கிற பகுதி விவசாயிங்க பலரும் கேட்ட மொதக் கேள்வி, ‘இயற்கை முறையில வாழை சாகுபடி பண்றது எப்படி?’னுதான்.‘ரசாயன உரத்தைப் போட்டு கட்டுபடியாகல. நோய்களைக் கட்டுப்படுத்த வழி தெரியலை’னுதான் நிறைய பேர் புலம்புனாங்க. ‘இயற்கை விவசாயத்துக்கு மாறுங்க... எல்லா கவலையும் போயிடும்’னு சொல்லி அதற்கான வழி முறைகளையும் சொல்லிக் கொடுத்தேன். நூற்புழு குறித்து நிறைய பேர் கேட்டாங்க. ‘வாழையில் ஊடுபயிரா 5 அடிக்கு ஒண்ணுனு செண்டுமல்லிச் செடிகளை நட்டு வைக்கணும். வாழை 6 மாத வளர்ச்சியில் இருக்கிறப்போ செண்டுமல்லியில பூவெடுக்குற மாதிரி நடவு பண்ணனும். இந்தப் பூச்செடிகளே நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திடும்’னு சுபாஷ் பாலேக்கர் சொல்லிக்கொடுத்த அற்புதமான தீர்வை அவங்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதுக்கு சிலர் ஆதாரம் கேட்டாங்க. அவங்ககிட்ட ‘பசுமை விகடன்’ல வந்த கட்டுரைகளைத்தான் எடுத்துக்காட்டினேன். அவ்வளவு பேரும் ஆச்சரியப்பட்டுப் போயிட்டாங்க” என்றார், பெருமிதத்துடன்.

மடிநோய்க்கு மருந்து!

“மாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்னையே ‘மடிநோய்’. மடிநோய் வந்த மாடுகளை ஒதுக்கி வைச்சிடுவாங்க.

கால் கிலோ சோற்றுக்கற்றாழையைத் துண்டு துண்டாக வெட்டி, அதை ஆட்டுக்கல் உரல்ல அரைச்சு, இரண்டு கரண்டி மஞ்சள்தூளையும், அரைப் பாக்கு அளவு சுண்ணாம்பையும் சேர்த்து கொஞ்சமா தண்ணீர் விட்டு பிசையணும். இதை ஒரு நாளுக்கு பத்து தடவை வீதம், ஒரு மாசத்துக்கு மடிக்காம்புகள்ல தேய்ச்சா... மடி நோய் சரியாகிடும்” என்றார், புண்ணியமூர்த்தி.

‘விவசாயிகளே... வியாபாரிகளாகவும் மாறுங்கள்!’ ஆலோசனை சொன்ன முன்னோடிகள்..!

Images

நியாயமான விலை கிடைக்கும்!

27-ம் தேதி காலை அமர்வில் ஈரோடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் நல்லசாமி பேசினார்.

“விவசாயிகள் தாங்கள் விளைவிக்க நினைக்கும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு எப்படி இருக்கிறது’ எனத் தெரிந்துகொண்ட பிறகுதான் விவசாயத்தை ஆரம்பிக்க வேண்டும். எந்த ஒரு காய்கறிப் பயிரும் நிலையான விலையில் விற்பனையாகாது. விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்றால், விவசாயிகள் ஒன்றிணைந்து, எங்களைப் போன்று உழவர் உற்பத்தியாளர் கம்பெனியை உருவாக்க வேண்டும். தற்போது எங்கள் அமைப்பு மூலமாக மஞ்சள் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது. மஞ்சளை சேமித்து வைத்து, அதன் பெயரில் கடன் பெறும் வசதியையும் உருவாக்கி இருக்கிறோம். இதேபோன்று அனைத்து பயிர்களுக்கும் உற்பத்தியாளர் அமைப்புகள் தோன்றினால், விளைபொருளுக்கு நியாயமான விலை கண்டிப்பாகக் கிடைக்கும்’’ என்றார் உறுதியான குரலில்.

விவசாயிகளே வியாபாரிகள்!

தொடர்ந்து பேசிய உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் துணைத்தலைவர் வெங்கடேசன், “ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மடிந்திருக்கிறார்கள். முன்பு ரப்பர் விலை 260 ரூபாய். தற்போது வெறும் 70 ரூபாய்க்குத்தான் விற்பனையாகிறது. இந்த விவரமெல்லாம் சாதாரண விவசாயிகளுக்குத் தெரிவதில்லை. இதைத் தடுக்க உற்பத்தியாளர் நிறுவனமே ஏற்றுமதியும் செய்ய வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் சிறிய அளவில் உள்ள நாடுகள்கூட 90 சதவிகிதம் உற்பத்தியாளர் கம்பெனி மூலமாகவே ஏற்றுமதி செய்கிறார்கள். அது மட்டுமில்லாமல் விவசாயிகள், தங்களது பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், அருமையான லாபத்தை அடைய முடியும். விவசாயிகளுக்கு பாதுகாப்பும், உரிய விலையும் கிடைக்க வேண்டுமென்றால்... உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் அவசியம். அப்போதுதான், உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அவர்களே விற்பனை விலையை நிர்ணயிக்க முடியும்” என்று அடித்துச் சொன்னார், அனுபவசாலியாக.

Images

சந்தை அறிந்து சாகுபடி செய்!

ஏற்றுமதிச் சந்தை வாய்ப்பு குறித்துப் பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ‘முனைவர்’ ரவீந்திரன், ‘‘விவசாயம் மட்டும் பெருகினால் போதுமா? விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டாமா? அதற்காக விவசாயிகள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது, ‘சந்தைப்படுத்துதல்’தான். சந்தைப்படுத்துதல் என்பது ஒரு பயிரை விதைக்கத் தொடங்கும்போதே துவங்கி விடுகிறது. எடுத்துக்காட்டாக மக்காச்சோளம், இதில், பல பயன்பாடுகள் இருந்தாலும், கோழித்தீவனத்துக்காக கொள்முதல் செய்யும்போதுதான் அதிக லாபம் கிடைக்கிறது. கோழித்தீவனமாக கொள்முதல் செய்யப்படும் மக்காச்சோளத்துக்கு ஈரப்பதம், நிறம், மணிகளின் அளவு ஆகியன சரியாக இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு தரத்தில் சந்தை வாய்ப்பு உள்ளது. அதுவும் சரியான பருவத்தில் சரியாக பயிர் செய்யப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு சரியான விற்பனை வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில், நாம் விளைவிக்கப்போகும் பொருளை எந்த நிறுவனம் அதிகம் கொள்முதல் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதற்கேற்ற பொருட்களை உற்பத்தி செய்து லாபம் பார்க்க முடியும். முக்கியமாக வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதியாகாத நேரத்தில் விவசாயிகள் தங்களது பொருட்களை சந்தைப்படுத்துவது இன்னும் அதிக லாபத்தைத் தரும்.

நேரடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தின் மூலமாகவும் விற்பனை செய்யலாம். ஏற்றுமதிச் சந்தையில் அரிசி, தானிய வகைகள், கோதுமை, மக்காச்சோளம், பழங்கள், காய்கறிகள் போன்றவை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகின்றன. இதில் பெரும்பாலான பொருட்கள் தமிழகத்திலிருந்துதான் ஏற்றுமதியாகின்றன” என்று கோடிட்டுக் காட்டினார்.

Images

தற்கொலைகளைத் தடுக்கலாம்!

கருத்தரங்கில் பேசிய உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் அறங்காவலர் பொன்னம்பலம், “விவசாயிகளே விவசாயம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டுச் செல்லும் சூழலில், பசுமை விகடனைப் படித்துவிட்டு விவசாயத்தை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவு விவசாய செய்திகளையும், எளிதான விவசாயச் வழிமுறைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. விவசாயத்துக்கு மறுமலர்ச்சி காலம் என்றால், ‘பசுமைவிகடனுக்கு முன்’, ‘பசுமை விகடனுக்குப் பின்’ என இரண்டாகப் பிரிக்கலாம். எங்கள் உழவன் உற்பத்தியாளர் நிறுவனமானது, அரசு சாரா நிறுவனம். எங்கள் உற்பத்தியாளர் நிறுவனத்தில் விவசாயிகள்தான் விலையை நிர்ணயிக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே சிறந்த உற்பத்தியாளர் கம்பெனிகளில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இது போல அனைத்து விவசாயிகளும் அவர்களின் மாவட்டங்களில் உற்பத்தியாளர் நிறுவனங்களைத் தொடங்கலாம். இதன் மூலமே விவசாயிகள் தற்கொலையை பெரிய அளவில் தடுக்கலாம்” என்றார்.

கூட்டம் அலைமோதிய வல்லுநர் அரங்குகள்...

கண்காட்சியில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் ஆகிய பயிர்களுக்கும் இடுபொருட்களுக்கும் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த அரங்குகளில், சம்பந்தப்பட்ட பயிர்கள் தொடர்பான விவசாயிகளின் சந்தேகங்களுக்கு, முன்னோடி விவசாயிகள் விளக்கம் அளித்தனர். இது, விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இடுபொருட்கள் தயாரிப்பு அரங்கில், விவசாயிகளுக்கு விளக்கம் அளித்த முன்னோடி விவசாயி லோகநாதன், “ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், அக்னி அஸ்திரம் மற்றும் பல்வேறு மூலிகைப் பூச்சிவிரட்டிகளின் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள், பனம்பழம், தேங்காய்த் தண்ணீர், சோற்றுக்கற்றாழை, வேப்பங்குச்சி, காட்டாமணக்கு, சீத்தாப் பழம், அவுரினு என்னோட வயல்ல இருந்து அத்தனையையும் கொண்டு வந்து மேசையில அடுக்கிட்டேன்.

அரங்குக்கு வந்தவங்க, ‘அது என்னங்க? இது என்னங்கனு?’ ஒவ்வொண்ணா கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டாங்க. அந்த பொருட்களோட மருத்துவ குணங்களையும் கேட்டு குறிப்பெடுத்துக்கிட்டாங்க. பூங்கார், மைசூர்மல்லி, மாப்பிள்ளைச்சம்பா, கிச்சடினு நாலு வகையான நாட்டு ரக அரிசிகளையும் பார்வைக்கு வெச்சிருந்தேன். ‘இந்த விதைகள் எங்கு கிடைக்கும்’னு ரொம்பபேரு ஆர்வமா கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டாங்க. இடுபொருட்கள் தயாரிப்பு வீடியோ படம், அரங்கில் ஓடிக்கிட்டே இருந்ததால, தெளிவா புரிஞ்சுக்கிட்டாங்க. காலையில தொடங்கி, கண்காட்சி முடிஞ்சு விசில் ஊதின பிறகும், என்னோட அரங்குல கூட்டம் குறையவேயில்லை” என்று சிலாகித்தார்.

Images

புகையானுக்குத் தீர்வு!

நெல் சாகுபடிக்காக ஒன்பது விருதுகள் பெற்ற முன்னோடி இயற்கை விவசாயி ‘நசியனூர்’ மோகனசுந்தரம், நெல்லுக்கான அரங்கில் அமர்ந்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

“பயிருக்குத் தேவையான தழைச்சத்துக்களை அள்ளிக்கொடுக்கிற பசுந்தாள் உரம், நெல் விவசாயத்துல அவசியமான ஒண்ணு. சணப்பு, தக்கைப்பூண்டுனு வளர்த்து மடக்கி உழவு செய்து வருவது இன்றைய நடைமுறை. ஆனா, 20 வருஷத்துக்கு முன்னெல்லாம் காடு, மேடு, மந்தைவெளிகள்ல சுயம்பா வெளைஞ்சு கிடக்கும் கொழுஞ்சி, எருக்கு இலை மாதிரியான செடிகளை வெட்டி, வண்டி வண்டியா ஏத்தி வந்து வயல்ல கொட்டி, ஏர் மாட்டை விட்டு மடக்கி உழவு செய்வோம். அது நல்ல இயற்கை உரமா இருந்து மகசூலை அள்ளிக் கொடுத்திச்சு. அதற்கான சூழலும் கிராமங்களில் இருந்திச்சு. இன்னிக்கு அதெல்லாம் அழிஞ்சு போச்சு. அது வெளைஞ்சு கிடந்த இடங்கள் எல்லாம் வீடுகளாயிடுச்சு. ஒடைக்கரைகள் எல்லாம் ஒடுங்கிப்போச்சு. என்ன செய்ய... எங்களை மாதிரியான இயற்கை விவசாயிகள் சணப்பு, தக்கைப்பூண்டுனு காசு கொடுத்து விதை வாங்கி விதைச்சு, வளர்த்து பசுந்தாள் உரமா கொடுத்து வர்றோம்.

சிலர் அடியுரத்தில் ஆரம்பிச்சு, அறுவடை வரைக்கும் ரசாயன உரமா வயல்ல கொட்டுறாங்க அதுதான் கவலையா இருக்கு. ரசாயன உரத்தோட தீமைகளை எடுத்துச் சொல்ல ‘பசுமை விகடன்’ களம் அமைச்சு கொடுத்தது. நான்கு நாள்ல ஆயிரக்கணக்கான பேருக்கு, ‘ஒற்றை நாற்று சாகுபடி’, ‘இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு’னு விளக்கம் கொடுத்திருக்கேன். பசுந்தாளையும் ஆமணக்குப் பிண்ணாக்கையும் உரமாகக் கொடுக்கிற நெல் வயல்ல புகையான் தாக்குதல் கட்டுப்படுது. பஞ்சகவ்யா 300 மில்லி, சூடோமோனாஸ் 100 கிராம் ரெண்டையும் 10 லிட்டர் தண்ணீர்ல கலந்து தெளிச்சாலும் புகையான் தாக்காது. இந்த நுட்பத்தை நிறைய பேருக்குச் சொல்லிக் கொடுத்தேன்” என்றார், மோகனசுந்தரம்.

அசத்திய பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2015!

பார்வையாளராக வந்திருந்த திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஜெயபாரதியிடம் பேசியபோது, “நான் மூணு வருஷமா பசுமைவிகடன் படிச்சிக்கிட்டு இருக்கேன். வீட்டுத்தோட்டம் சம்பந்தமா வர்ற தொடரைப் படிச்சதுமே, எங்க வீட்டுலயும் வீட்டுத்தோட்டம் போடணும்னு முடிவு செஞ்சு அதற்கான ஆலோசனையில இருந்த நேரத்துலதான் ’ஈரோட்டில் நடைபெற்ற பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2015’ விளம்பரத்தைப் பார்த்தேன். நான் நினைச்சதை விடவும் வித்தியாசமான வடிவத்துல எப்படியெல்லாம் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம், செடிகள் வளர்க்க எந்தமாதிரியான தொட்டிகளைப் பயன்படுத்தலாம், ஒரே தொட்டியில் எப்படி பல செடிகளை வளர்க்கலாம்னு தெரிஞ்சுக்கிட்டேன். பைகள்லேயே ஆரஞ்சு, செடிமுருங்கை, மாதுளை... எல்லாம் காய் காய்ச்சு நிற்கிறதைப் பார்த்ததும் எனக்கு தெம்பு வந்துடுச்சு. வீட்டுத்தோட்டம் போட்டா நிச்சயம் வீட்டுக்குத் தேவையான எல்லா காய்கறிகளையும் நாமளே சாகுபடி செஞ்சிடலாம்னு முடிவெடுத்திருக்கேன். சீக்கிரமே வீட்டுத் தோட்டத்துக்கான வேலைகளை ஆரம்பிக்கப் போறேன். வீட்டுக்குத் தேவையான காய்கறிகளோட விதைகளையும் வாங்கி வெச்சுக்கிட்டேன்” என்றார்.

விளைபொருட்கள்... கவனம்!

Images

கண்காட்சியின் நிறைவு நாளான 28-ம் தேதி அன்று கருத்தரங்கு கூடத்தில்... மதிப்புக் கூட்டும் முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர்.கணபதி உரையாற்றினார்.

“நாம் காய்கறிகளை விளைவித்து, விற்பனை செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், பல சமயங்களில் விலை குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. ஆனால், மதிப்புக் கூட்டுதல் மூலம் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும். ‘எல்லோருக்கும் மதிப்புக் கூட்டுதல் சாத்தியமா?’ என்று கேட்கலாம். ஆனால், எல்லா வகையிலும் அது சாத்தியமான விஷயம்தான். ஒரு பொருளை விளைவித்து நேரடியாக விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்குமோ... அதை விட இரண்டு மடங்கு லாபம் மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும்போது கிடைக்கும்.

நாம் மதிப்புக்கூட்டுதலை விட்டு விட்டு அறுவடையிலிருந்தே மதிப்பைக் குறைக்க ஆரம்பித்து விடுகிறோம். சரியான முறையில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த பழங்கள், காய்கறிகளை கவனமாகக் கையாள வேண்டும். சேமித்து வைக்க போதுமான வசதிகளோடு இடம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றின் தரத்தை உயர்த்த முடியும். லாபமும் சாத்தியமாகும். எளிமையான முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்தும் சாறு எடுத்து மதிப்புக் கூட்டி விடலாம். இந்தப் பொருளுக்குத்தான் விலை கிடைக்கும் என்றில்லை. தரமான எந்தப் பொருளுக்கும் தகுதியான விலை கிடைக்கும். முருங்கை இலைக்குக் கூட உலக அளவில் அதிக தேவை இருக்கிறது. ஆனால், விவசாயிகள் கூட்டாகச் சேர்ந்தால் ஏற்றுமதி சாத்தியம்” என்ற கணபதி சில நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்தார்.

தொடர்ந்து பேசிய, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிருபாகரன், “வீட்டிலேயே கால்நடைகளுக்கு மருத்துவம் செய்யும் பாரம்பர்ய வைத்திய முறைகளை விவசாயிகள் அறிந்து வைத்திருக்க வேண்டும். மிளகு, மஞ்சள், பெருங்காயம், பூண்டு போன்றவற்றைக் கொண்டே எளிதாக வைத்தியம் செய்யலாம். முக்கியமாக, நமது கால்நடைகளுக்கு வெளியிலிருந்து பசுந்தீவனம் வாங்கக் கூடாது. அவற்றை நமது தோட்டத்திலேயே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். தீவனம் அதிகமாகக் கிடைக்கும்போது ‘பதனப்புல்’ தயாரித்து வைத்து பற்றாக்குறை சமயங்களில் சமாளிக்கலாம்” என்றார்.

Images

அதிகத் தண்ணீர் கூடாது!

வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை குறித்துப் பேசிய கோயம்புத்தூரைச் சேர்ந்த கனகராஜ், “இன்றைய சூழ்நிலையில் மாடித்தோட்டம் மிக அவசியமாகிறது. அதன் மூலமே பெரும்பாலான காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ளமுடியும். மாடித்தோட்டத்தில் ‘பசுமைக் குடில்’ அமைப்பதன் மூலம், பூச்சிகளில் இருந்தும் அதிக வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கலாம். தரைப்பரப்பில் பலகை அல்லது பிளாஸ்டிக் ஷீட்களை வைத்து அதன் மேல் தொட்டிகளை வைக்க வேண்டும். ஒவ்வொரு தொட்டிக்கும் முக்கால் அடி இடைவெளி அவசியம். அதிகத் தண்ணீர் ஊற்றினால், செடிகள் வேகமாக வளரும் என்ற எண்ணம் தவறு. மண்புழு உரம், அமுதக்கரைசல் போன்றவற்றை அளவாக இட்டாலே போதுமானது. தேவைப்படின், பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி போன்றவற்றையும் பயன்படுத்தலாம்” என்றார்.

வியர்வைக்கு, விலை இருக்க வேண்டும்!

மதிய அமர்வில் பேசிய சேலம் மாவட்ட முன்னோடி விவசாயி ‘அபிநவம்’ ஜெயராமன், “வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே விவசாயம் செழிக்கும். உழவர் மன்றம், உழவர் கூட்டமைப்பு, உற்பத்தியாளர் கம்பெனி போன்ற அமைப்புகள் மூலமாக உற்பத்தியையும், விற்பனையையும் செய்ய வேண்டும். உற்பத்தியையும், விலையையும் விவசாயிகள் நிர்ணயிக்க வேண்டும். நாம் மிகப்பெரிய சமுதாயக் கொலை செய்து விட்டோம். 50 ஆண்டுகளாக விவசாயத்தை அடுத்தவன் கையை நம்பி கொண்டு போனதன் விளைவுதான் இது. விவசாயி சிந்துகின்ற ஒவ்வொரு துளி வியர்வைக்கும் விலை இருக்க வேண்டும். இனிமேல் விவசாயத்துக்கு ஒரே பயிர் சரிப்பட்டு வராது. ஊடுபயிர்தான் உயர்த்தும் என்பது என்னுடைய கருத்து. சந்தையில் எந்தப் பொருளுக்குத் தேவை இருக்கிறது என்பதைப் பொறுத்து விவசாயம் செய்ய வேண்டும். இந்தியாவின் தலைவிதியை தீர்மானிப்பது... இனி விவசாயிகளாக இருக்க வேண்டும்” என்றார்.

‘ஆடி’ கார் முக்கியமில்ல... ஆரோக்கியம்தான் முக்கியம்!

கருத்தரங்கின் நிறைவாக மேடையேறிய முன்னோடி விவசாயி பரிமளா, “கடன் அதிகமாக வாங்காமல் எளிமையான விவசாய முறைகளை மேற்கொள்ள வேண்டும். நான் விவசாயத்துக்கு வரும்போது 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தேன். இப்போது மாதம் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கிறேன். விவசாயம் முன்னேறாமல் இந்தியா வல்லரசு ஆகிவிடாது. ‘ஆடி’ கார்ல போறது வாழ்க்கையில்லை, ஆஸ்பத்திரிக்கு போகாம இருக்கிறதுதான் வாழ்க்கை. அடுத்தவன் சொல்றதுக்காக விவசாயம் பார்க்கக் கூடாது. முழுமன நிறைவுடன் ஈடுபட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம். எல்லாவற்றையும் விட மேலானது நீர் மேலாண்மை, அதையும் நாம் கவனமாகப் பார்க்கிறதில்லை. எங்கு பார்த்தாலும் மணல் திருட்டு நடக்குது. எந்த ஆறும் உயிரோட இல்லை. இதற்கெல்லாம் முழுவதுமா தீர்வு கண்டுபிடித்தால்தான் விவசாயத்தைச் செம்மையாக செய்ய முடியும்” என்றார்.

நான்கு நாட்கள் நடந்த கருத்தரங்கில் அரங்கு கொள்ளாத கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு நாளும் பிரிய மனமில்லாமல் விவசாயிகள் விடைபெற்று சென்றது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வாசகர்களின் அன்புக் கட்டளையை ஏற்று... பசுமை விகடன் 10-ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, திருச்சி மாநகரில் வேளாண் கண்காட்சி-2016 நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சியில் நடக்கவிருக்கும் கருத்தரங்கிலும் பல திசைகளிலிருந்து, பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள், முன்னோடி விவசாயிகள் எனக் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் அனுபவ உரையாற்ற உள்ளனர். அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது, பசுமை விகடன்.

Images

முதலில் சோதனை... பிறகு சாகுபடி!

கண்காட்சியில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் ஆகிய பயிர்களுக்கும் இடுபொருட்களுக்கும் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த அரங்குகளில், சம்பந்தப்பட்ட பயிர்கள் மற்றும் இடுபொருட்கள் தொடர்பான விவசாயிகளின் சந்தேகங்களுக்கு, முன்னோடி விவசாயிகள் விளக்கம் அளித்தனர். இது, விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கண்காட்சியில் நெல், வாழை, மஞ்சள், கரும்பு ஆகிய பயிர்களுக்கு சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டு, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு முன்னோடி விவசாயிகள் விளக்கம் அளித்தனர்.

மஞ்சள் அரங்கில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த முன்னோடி விவசாயி காந்தி, ‘‘நான் திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில படிச்சிட்டு, இப்ப விவசாயம் பார்த்துட்டு வர்றேன். மஞ்சக்காட்டு காத்து வீசும் ஈரோட்டில் நடந்த கண்காட்சியில் மஞ்சள் வல்லுநரா என்னைப் பெருமைப்படுத்தின பசுமை விகடனுக்கு நன்றி. மஞ்சள் விவசாயம் கொடிகட்டிப் பறக்கும் ஈரோடு விவசாயிகள் பலரும் இயற்கை மஞ்சள் சாகுபடித் தொழில்நுட்பம் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினாங்க. ‘மஞ்சள்’ விவசாயம் என்னனு தெரியாத மற்ற மாவட்ட விவசாயிகள் கூட அதன் வருமானம் குறித்து சொன்னதும் ஆச்சர்யப்பட்டுப் போனாங்க. நல்ல பக்குவம் செய்து வந்தால் மஞ்சள் கிழங்குகளை 6 வருஷம் வரைக்கும் கூட இருப்பு வெச்சு விற்க முடியும் என்கிற தகவலை மத்த மாவட்ட விவசாயிகள் ஆச்சர்யமா கேட்டாங்க. அதோட, ஆண்டுப் பயிரான மஞ்சள் அறுவடைக்கு வர்றதுக்குள்ள சின்னவெங்காயம், பச்சை மிளகாய்னு ஊடுபயிர் சாகுபடி செய்ற முறையையும் எல்லாருக்கும் சொன்னேன்.

மஞ்சள் விவசாயத்துக்கு மாற ஆசைப்படுறோம்னு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350 விவசாயிங்க முகவரி கொடுத்திருக்காங்க. அவங்களுக்கெல்லாம் தொடர்ந்து ஆலோசனை சொல்லிக்கிட்டுத்தான் இருக்கேன். ‘ஆரம்பத்துல 10 சென்ட்ல மட்டும் மஞ்சள் கிழங்கை நடவு செய்து நான், சொன்ன தொழில்நுட்பங்களைச் சரியா செஞ்சு பாருங்க... நல்லா வெளைஞ்சா தொடர்ந்து பண்ணுங்க, இல்லாட்டி விட்டுடுங்கனுதான்’ புது விவசாயிகள்கிட்ட சொல்லிக்கிட்டிருக்கேன்” என்றார்.

கரும்பு அரங்கில் விளக்கம் அளித்த நந்திவர்மன், “சாப்பிட மட்டுமே பயன்படுற செங்கரும்பு; வெல்லம், நாட்டுச் சர்க்கரைக்குத் தேவைபடும் வீரியக்கரும்பு; சர்க்கரை ஆலைகள்ல அரவை செய்து சீனி தயாரிக்கப் பயன்படும் ஆலைக்கரும்பு மூணையும் பற்றி விவசாயிகளுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் சொன்னேன். இயற்கை முறை கரும்பு சாகுபடிக்கான சந்தேகங்களையும் ரொம்ப பேரு கேட்டுக் குறிச்சிக்கிட்டாங்க. பரம்பரை விவசாயிகளை விட புதிய விவசாயிகள்தான் ஆர்வமா கேட்டாங்க. அதுல 425 பேர் ஆலோசனை தேவைனு செல்போன் நம்பர் கொடுத்திருந்தாங்க. தினமும் பத்து பேராவது போன்ல கரும்பு சாகுபடி பற்றி கேட்டுக்கிட்டே இருக்காங்க. நானும் பதில் சொல்லிக்கிட்டே இருக்கேன்” என்றார்.

Images

நிம்மதியான வருமானத்துக்கு விவசாயம்தான் வழி!

பார்வையாளராக வந்திருந்த வாசகர்கள் பலர் கண்காட்சியைப் பற்றிய தங்கள் கருத்துக்களை ‘பசுமை விகடன்’ குழுவினருடன் பகிர்ந்துகொண்டனர். அவற்றில் சில இங்கே...

பத்மகுமார், பொறியியல் கல்லூரி மாணவர், கன்னியாகுமரி: “நான் படிக்கிறது பொறியியல்னாலும் விவசாயம் ரொம்பப் பிடிக்கும். நான் விவசாயக் குடும்பம் இல்லை. என் நண்பர்கள் பலர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. விடுமுறையில் அவங்க வீட்டுக்குப் போய் விவசாய வேலைகளைச் செஞ்சதுனால விவசாயத்து மேல அதிக ஈடுபாடு வந்துடுச்சு. அந்த ஈடுப்பாட்டை அதிகரிச்சது ‘பசுமை விகடன்’தான். கருத்தரங்குல கலந்துக்கிறதுக்காகவே கல்லூரிக்கு லீவு போட்டுட்டு வந்திருக்கேன். பொறியியல் படிப்பு முடிச்சதுமே இயற்கை முறையில விவசாயம் செய்யப் போறேன். விகடன் பிரசுர ஸ்டால்ல இயற்கை விவசாயம் சார்ந்த புத்தகங்களைத் தேடிப்பிடிச்சு வாங்கிட்டேன்.

இடுபொருட்கள் குறித்த விவசாயியோட நேரடி செயல்விளக்கமும், எல்.இ.டி டி.வி-யில அதை ஒளிபரப்பினதும் அருமை. அந்த விவசாயி, நேரடியா மற்ற விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறதையும், டி.வி-யில ஒளிபரப்பினதையும் என்னோட மொபைல் போன்ல வீடியோ எடுத்து வெச்சிருக்கேன். நான் விவசாயம் செய்யும்போது எனக்கு இந்த வீடியோ கண்டிப்பா உதவும். பொறியியல் படிப்பு மூலமா குறிப்பிட்ட காலத்துக்கு நல்லாவே சம்பாதிக்கலாம். ஆனா, நிரந்தரமா, நிம்மதியா வாழ்க்கையில முன்னேறணும்னா... விவசாயம் செஞ்சா மட்டும்தான் முடியும்.”

ரசாயன விவசாயத்துக்கு முற்றுப்புள்ளி!

சிவசக்திவேல்-சத்யா தம்பதி, ஈரோடு: “தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா மாவட்டத்து விவசாயிகளும் கண்காட்சிக்காக ஈரோட்டுக்கு வந்துக்கிட்டே இருக்காங்க. ஆனா, நாங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்க. எங்க ஊரிலேயே கண்காட்சி நடக்கிறதுனால நாலு நாளும் கருத்தரங்குல கலந்துக்கிட்டு வல்லுநர்கள், சாதனை விவசாயிகளோட பேச்சுகளையும் கேட்கிற வாய்ப்பு கிடைச்சுது. நாலு நாளும் தொடர்ந்து கருத்தரங்குக்கு வந்துக்கிட்டு இருக்கோம்.

6 ஏக்கர்ல ரசாயன முறையில் கரும்பு சாகுபடி செய்துட்டு இருக்கோம். ஆனா, மகசூல் ஒவ்வொரு வருஷமும் குறைவாத்தான் இருக்கு. புளியங்குடி அந்தோணிசாமி ஐயா தோட்டத்துல 24 வது தடவை தொடர்ந்து வளர்ந்து நிற்கிறதையும், ‘கரும்பு’ நடேசன் ஐயா தோட்டத்துல 11 வது தடவை வெட்டப் போறேன்னு சொல்லுறதையும் கேட்கும்போது, இயற்கை விவசாயத்துல இப்படி ஒரு மகசூலா?னு ஆச்சர்யமா இருக்கு.

கருத்தரங்கு முடியும்போதே ரசாயன விவசாயத்துக்கும் முற்றுப்புள்ளி வெசசிட்டோம். இனி இயற்கை முறையிலதான் கரும்பு சாகுபடி செய்யணும்னு முடிவு பண்ணிட்டோம். மஞ்சள், வாழை, நெல், கரும்புனு தனித்தனி பயிர்களுக்கும் தனி அரங்கு அமைச்சது ரொம்ப பயனுள்ளதா இருந்தது. அடுத்து, ‘பசுமை விகடன்’ நடத்தப்போற கண்காட்சியிலயும் கலந்துக்க காத்துக்கிட்டிருக்கோம்.”