'திருச்சிராப்பள்ளி' என்னும் மாநகரின் சுருக்கமே 'திருச்சி' என்று அழைக்கப்படுகிறது. இந்த மாநகரம் தமிழகத்தின் மத்திய பகுதியிலும், காவிரி ஆற்றின் கரையோரத்திலும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் நான்காவது பெரிய மாநகராக இருந்து வருகிறது திருச்சி. தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் போக்குவரத்து வசதிகளும் உண்டு. புவியியல் முறையில் இந்தியாவின் மத்திய தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
திருச்சியில் முக்கிய ரயில் நிலையமும், சர்வதேச விமான நிலைய சேவையும் இயங்கி வருகிறது. ஐந்தடுக்கு முனையமாக, சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்களும் வந்து செல்கின்றன. இந்தியாவில் உள்ள பெரிய விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு திருச்சி நுழைவாயிலாக இருந்து வருகிறது.
திருச்சியில் காவிரி நதியானது, இரண்டு பெரிய நதிகளாக உருவெடுக்கிறது. ஒன்று காவிரி, மற்றொன்று கொள்ளிடம். ஆற்றின் வாய்க்கால்களாக உய்யகொண்டான் வாய்க்கால், கொறையார் மற்றும் குடிமுருட்டி வாய்க்கால்கள் நகரில் செல்கின்றன.
திருச்சி மாநகரம் இந்தியாவின் இரண்டாவது தூய்மையான நகரம் என்ற வரிசையில் 2015ம் ஆண்டுக்கான தேசிய நகர சுகாதார கொள்கையின்படி ,வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் உள்ள தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற ஊர்களின், வேளாண் செயல்பாடுகளுக்கு முக்கிய மையமாக இருந்து வருகிறது. பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியாக அருகிலுள்ள தஞ்சாவூர், புதுகோட்டை, மதுரை, திண்டுக்கல், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் மற்றும் கடலூர் மாவட்டங்களோடு நெருங்கிய பிணைப்பு கொண்டவை.
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2017, திருச்சியில் நடைபெறுவதற்கு இந்த அம்சங்கள் முக்கியத்துவம் பெறும்.