விகடன் குழுமம்

தமிழ் இதழியல் வரலாற்றில் 90 ஆண்டுகால வரலாறு கொண்டது விகடன் குழுமம். 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆனந்த விகடன். தொடர்ந்து தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஜூனியர் விகடன், அவள் விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன், சுட்டி விகடன், மோட்டார் விகடன், பசுமை விகடன், டாக்டர் விகடன், அவள் விகடன் மணமகள் மற்றும் அவள் விகடன் கிச்சன் என்று விகடன் குழுமத்திலிருந்து 11 இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விகடன் குழும இதழ்கள், தமிழ்நாடு தொடங்கி, பிற மாநிலங்கள், வெளிநாடுகள் என்று பல வாசகர்களையும் சென்றடைந்து கொண்டிருக்கின்றன. குழுமத்தின் இதழ்கள் யாவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியும் மக்களுக்கு பயனுள்ளவையாகவும், தூண்டுகோலாகவும் இருந்து வருகின்றது. இந்தக் குழுமத்தின் ஓர் அங்கம் பசுமை விகடன்.

பசுமை விகடன்

உலகளவில் விவசாயத் துறையில் நடைபெற்று வரும் மாற்றங்கள், கடைக்கோடி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்... கடந்த 2007-ம் ஆண்டில் மலர்ந்த இதழ்தான், 'பசுமை விகடன்’.

Pasumai

இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்பு உணர்வு, இயற்கை பற்றிய புரிதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்களின் காதலர்களான பச்சை மனிதர்கள், சிறுதானியங்களின் பெருமை, இயற்கை உணவுகள்... என தனிமனிதனுக்கும், சமூகத்துக்கும் தேவையான அத்தனைத் தரவுகளையும் அள்ளி அள்ளிக் கொடுத்து வருகிறது பசுமை விகடன். தமிழக விவசாயிகளின் மனதில் தனி இடத்தைப் பெற்று, பெருவாரியான மக்களின் ஆதரவோடு கடந்த 9 ஆண்டுகளாக விவசாயம் சம்பந்தப்பட்ட செய்திகளைக் கொடுத்து வருகிறது. லட்சக்கணக்கான வாசகர்களை மாதந்தோறும் சென்றடைந்து கொண்டிருக்கிறது பசுமை விகடன். அன்று முதல் இன்று வரை உழவர்களின் உற்றத் தோழனாக, விவசாயிகளின் சங்கநாதமாக, தொலைதூரத்தில் இருக்கும் தொழில்நுட்பங்களையும் தெருமுனைக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தகவல் களஞ்சியமாக... இந்த ஒன்பது ஆண்டுகளில் விவசாயத் துறையில் பசுமை விகடன் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், ஏராளம்... ஏராளம்.

2007-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, கோயம்புத்தூரில், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் தலைமையேற்க, பசுமை விகடனை உலகுக்கு அர்ப்பணித்தார் கவிப்பேரரசு வைரமுத்து. தொடக்க இதழ் முதலே... நாம் இழந்துவிட்ட பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் பணியில் இறங்கிய பசுமை விகடன், அதற்கான தேடலில் உள்ள நபர்களுடன் கைகோத்து செயல்பட்டு கொண்டிருக்கின்றது.