நல்உணவுத் திருவிழா... நல்ல தொடக்கம்...!

சிறுதானியங்களுக்கும் நமக்குமான பந்தம் இன்று நேற்றானதல்ல... அது, ஆதிநாட்கள் தொட்டே தொடர்கின்ற பந்தம். சங்க காலத்திலிருந்தே நம் உணவுமுறையில் சிறுதானியங்கள் இருந்து வருகின்றன. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளாக நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து கிடந்த சிறுதானியங்கள், கடந்த 60 ஆண்டுகளில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தன. ‘உணவு உற்பத்தி’ என்ற சிலந்தி வலையில் சிக்க வைக்கப்பட்ட பிறகு, சிறுதானிய சாகுபடி குறைந்தது.

Images

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக அருகிக் கிடந்தது சிறுதானிய சாகுபடி. நமது பாரம்பர்ய, மண்ணின் பயிரான சிறுதானியங்கள் நம்மை விட்டு வெகுவேகமாக விலகிக் கொண்டிருந்த நேரத்தில்... சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அதை மீட்டெடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்த நம்மாழ்வார் போன்ற பெரியோர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வாசக விவசாயிகளுடன் பசுமை விகடன் கைகோக்க... இன்று தமக்கென தனியிடத்தைப் பிடித்து மீண்டும் அரியணையில் அமரத் தொடங்கியிருக்கின்றன சிறுதானியங்கள்.

அடுத்தக்கட்டமாக, சிறுதானிய உணவுகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘பசுமை விகடன்’ மற்றும் ‘அவள் விகடன்’ இணைந்து ‘நல்உணவு சிறுதானிய விருந்து’ எனும் நிகழ்ச்சியை நடத்தின. ஜூன் 27-ம் தேதி அடையாறில் உள்ள டாக்டர்.எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

டாக்டர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி நிர்வாகம், கிராம போஜன், சக்தி மசாலா ஆகிய நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்க, அர்ஜுன் ஆர்கானிக், மொபி டெக், மயூரா ஃபுட் புராடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தோள் கொடுத்தன. வீட்டுத்தோட்டம், சிறுதானிய மதிப்புக்கூட்டுப் பொருட்கள், பாரம்பர்ய விதைகள், இயற்கை உணவுப் பொருட்கள் என 42 கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. புத்தர் கலைக்குழு மகிழினி மணிமாறனின் கிராமியக் கலைநிகழ்ச்சி, கண்களுக்கும் விருந்தாக அமைந்தது.

காலை எட்டு மணியிலிருந்தே பார்வையாளர்கள் வரத் தொடங்கி விட்டனர். சுமார் ஆயிரம் பேர் வரை நெருக்கியடித்து அமரும் கருத்தரங்கக் கூடம் நிறைந்த பிறகும் பலர் நின்றுகொண்டே பேச்சாளர்களின் உரை வீச்சுக்குக் காது கொடுத்தனர்.

அன்று இருந்த ஆரோக்கியம் இன்றில்லை!

Images

எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர். அபிதா சபாபதி: “நாங்கள் படிக்கும்போது, இப்போது இருப்பது போல தண்ணீரைச் சுத்திகரிக்கும் ஆர்.ஒ, யு.வி சிஸ்டம் எல்லாம் கிடையாது. குழாயில் வரும் தண்ணீரைத்தான் குடித்தோம். ஆனால், அன்று இருந்த ஆரோக்கியம் இன்று இல்லை. அன்று சாப்பிட்ட மாம்பழத்தில் வண்டுகள் இருக்கும். அந்த வண்டுகளைப் பெரிதாக நினைக்க மாட்டோம். அந்தப் பழங்கள் உடலுக்கு எந்த கேட்டையும் உருவாக்கவில்லை. இன்று நாம் மாம்பழம் சாப்பிடவே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு அதை ரசாயன முறையில் அவசர அவசரமாகப் பழுக்கச்செய்து நம் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கிறார்கள் சிலர். வியாபாரம் நல்லதுதான். ஆனால், மனசாட்சிக்கு விரோதமான வியாபாரம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சிக்கன் சாப்பிடுவது இன்றைய இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஒரு மிகப்பெரிய ஃபேஷனாகவே ஆகிவிட்டது. நீங்கள் சாப்பிடும் பொறித்த சிக்கன், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாம்பழத்துக்கு இணையான ஆரோக்கியத்தை நிச்சயம் கொடுக்காது” என்று அழகாக விஷயத்தை பதியம் போட்டார்.

மண்ணுக்குரிய காய்கள்தான் உடலுக்கு ஏற்றவை!

Images

சித்த மருத்துவ நிபுணர் டாக்டர். தெ.வேலாயுதம்: “ஒரு காலத்தில் தொற்றுநோய், கொள்ளைநோயை ஒழிப்பதற்காக ‘ஆன்ட்டிபயாடிக்’ என்று சொல்லப்படுகிற நோய் எதிர்ப்புச்சக்தி மாத்திரைகளை விஞ்ஞானம் கொண்டுவந்தது. இப்போது உடலில் தோன்றுகிற நல்ல கிருமியோ, கெட்ட கிருமியோ எல்லாவற்றையும் இது அழிக்கிறது. வாழ்வியல் மாற்றங்களால், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, புற்றுநோயெல்லாம் வேகமாகப் பரவி வருகின்றன என்பது அச்சுறுத்தும் செய்தி. நோய்களுக்கெல்லாம் தலைமையகமாக இந்தியா மாறி வருகிறது. இதில் இந்தியாவின் தலைமையகமாக தமிழகம் ஆகிவிட்டதென்பது வேதனைக்குரிய செய்தி. உலகுக்கே பண்பாட்டை, வாழ்வியல் கோட்பாட்டைச் சொன்ன தமிழகம் சரிந்து வருவது மிக வேதனையான விஷயம்.

எந்த மண்ணில், எந்தத் தட்பவெப்பநிலையில் வாழ்கிறோமோ... அந்த மண்ணில், அந்தத் தட்பவெப்பநிலையில் விளையக்கூடியதைச் சாப்பிடுவதுதான் உணவின் அடிப்படை. இது கோதுமைக்கு மட்டுமல்ல, காய்கறிகளுக்கும் பொருந்தும். அவரைக்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய், கோவைக்காய், முருங்கைக்காய் இவையெல்லாம் நம் மண்ணில் நன்றாக விளையக்கூடியவை. நம் உடலுக்கும் ஏற்றவை. இங்கிலீஷ் காய்கறிகள் நமக்கு ஏற்றவையல்ல” என்று சொல்லி முடிக்கும்போது கரகோஷங்கள் முடிய வெகு நேரமானது.

நாட்டு உணவை மறந்ததுதான் நோய்க்குக் காரணம்!

உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் கு.செல்லமுத்து: “சிறுதானியங்களை மறந்து விட்டதால், இன்று நோய்கள் இல்லாத வீடுகளே இல்லை. எல்லோரும் மருந்துகளுக்கு அடிமையாகி இருக்கிறோம். நம்முடைய தானியங்கள், பயறு வகைகள், பழங்களை மறந்ததன் விளைவே இந்த நோய்களுக்குக் காரணம். இன்று கிராமத்துக்குக் கிராமம் மருந்து கடைகள் உள்ளன. நம் சந்ததிகளுக்கு சொத்து, பணத்தையெல்லாம் விட்டுச் செல்வதை விட, நல்ல ஆரோக்கியத்தை விட்டு செல்வதே சிறந்தது.

சிறுதானியங்களை அதிகம் பயிர் செய்வதற்கு அரசு ஊக்கத்தொகை, மானியங்களை வழங்கினால், சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரிக்கும். சிறுதானிய உணவுகள் குறித்து ஏற்பட்டுள்ள விழிப்பு உணர்வுக்கு ‘பசுமை விகடன்’ செய்து வரும் பணி முக்கியமானது” என்று சொன்னதை பார்வையாளர்கள் பலரும் ஆமோதித்தனர்.

தாயின் கருவறைபோலத்தான் மண்!

‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் அகமது இஸ்மாயில்:

“கிராமங்களில் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதற்குக் காரணம், நாக்குப்பூச்சி என்பார்கள். ஆனால், அது உண்மையில்லை. நைட்ரேட் விஷம்தான் வலிக்குக் காரணம். ரசாயன உரங்களை மண்ணில் இடும்போது, அதில் இருக்கும் நைட்ரேட் மண்ணைத் தாண்டி நிலத்தடி நீருக்குள் கலக்கிறது. அந்த தண்ணீரைக் குடிக்கும்போது, பக்க விளைவை ஏற்படுத்துகிறது.

Images

மண்ணில் நைட்ரேட், பாஸ்பேட், பொட்டாஷ் போன்ற உரங்களைக் கொட்டி உப்பாக்கிவிட்டோம். உப்பு இருக்கும் மண்ணில் எந்த நுண்ணுயிரும் வாழாது. தாயின் கருவறை எப்படியோ, அப்படித்தான் மண்ணும். மண்ணில் எந்த விதையைப் போட்டாலும் வளர்த்துக் கொடுக்கும். அதற்கு மண்ணில் உயிர்ச்சத்து இருக்க வேண்டும். சராசரியாக, மண்ணில் 5 முதல் 10 சதவிகிதம் வரை உயிர்ச்சத்து இருக்க வேண்டும். தற்போது இந்தியாவில் 0.5 சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. இதற்கு மண்ணில் மண்புழுக்களை வளர செய்ய வேண்டும். எளிதாக இவற்றை வளர்க்க முடியும்.

பல இடங்களில் மண்புழு உரத் தயாரிப்புக்கான பயிற்சிகளும் நடக்கின்றன. அதில் கலந்துகொண்டு மண்புழு உரத்தைத் தயாரிக்கலாம். விஷமில்லா உணவு பொருட்களை உற்பத்தி செய்யலாம்” என்றவர், தொடர்ந்து வீட்டுத்தோட்டம், மண் வரலாறு, உணவுக் கலப்படம் பற்றியும் பேசினார்.

மதிய உணவுக்குப் பிறகு ‘சின்ன தானியங்கள் பெரிய சத்துக்கள்’ என்ற தலைப்பில் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி உரை நிகழ்த்தினார். சமையல்கலை நிபுணர்கள் ரேவதி சண்முகம், ‘மெனு ராணி’ செல்லம், ஆகியோர் சிறுதானிய சமையல் செய்முறை பயிற்சிகளை வழங்கினர். ‘லாபம் தரும் சிறுதானியங்கள்’ என்ற தலைப்பில் சிறுதானிய மகத்துவ மையப் பேராசிரியர் நிர்மலக்குமாரி பேசினர்.

கடைசி வரை கூட்டம் கலையாமல் காது கொடுத்துக் கொண்டிருந்து, சிறுதானியங்களுக்குக் கிடைத்த வெற்றி!