அசைவ உணவுக்கு ஈடான சுவையுடன், சைவ உணவு தயாரிக்க சோயா, சேப்பங்கிழங்கு... எனப் பல விளைபொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றில் முதலிடம் வகிக்கிறது, காளான்.
சிப்பிக்காளான், பட்டன் காளான், பால்காளான் என காளானில் பல வகைகள் இருந்தாலும்... அறை வெப்ப நிலையிலேயே அதிக நாட்கள் கெடாமல் இருப்பதோடு... இறைச்சிக்கு இணையான சுவை கொடுக்கக்கூடியது பால்காளான். அதனால், காளான் சந்தையில் தனியான இடம் பிடித்திருக்கிறது, பால்காளான். இதனால், சமீபகாலமாக விவசாய உபதொழிலாக பால்காளான் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பால்காளான் வளர்ப்பில் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்.
விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் இருபதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முகையூர் கிராமம். இங்குதான் பால்காளான் பண்ணை அமைத்திருக்கிறார், ரமேஷ். வெள்ளைக்குடை போல பாலித்தீன் பைகளில் வளர்ந்து நின்ற காளானை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ரமேஷை சந்தித்தோம்.
‘‘எங்க அப்பாவுக்குச் சொந்த ஊர் விழுப்புரம் பக்கத்துல இருக்கிற வளவனூர். நான் பி.எஸ்.சி. கணிதவியல் முடிச்சிட்டு, ஒரு போட்டோ ஸ்டியோவுல ஆறு மாசம் வேலை பார்த்துட்டு சொந்தமா போட்டோ ஸ்டுடியோ வெச்சேன். அப்பறம் கல்யாணம் ஆன பிறகு, ஸ்டுடியோவை விழுப்புரத்துக்கு மாத்தினேன். அந்த சமயத்துல தனியார் தொலைக்காட்சியில மாவட்ட செய்தியாளரா வேலை கிடைச்சது. செய்தி சேகரிக்க பல ஊர்களுக்குப் போற வாய்ப்பும் கிடைச்சது. அப்போ, விவசாயம் சம்பந்தமான செய்திகளைச் சேகரிக்கும் போது, விவசாயத்து மேல ஆசை வந்துச்சு.
ஒரு கட்டத்துல தொலைக்காட்சி வேலையை விட்டு ஸ்டுடியோவை மட்டும் நடத்திக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துல ‘பசுமை விகடன்’ல ஜீரோ பட்ஜெட் பயிற்சி பத்தின அறிவிப்பு வந்தது. ஈரோடுல நடந்த பயிற்சியில கலந்துக்கிட்ட பிறகு, இயற்கை விவசாயம் பத்தின ஆர்வம் அதிகமானதால... விழுப்புரம் பக்கத்துல நிலம் வாங்கி விவசாயத்துல இறங்கினேன். ஆனா, குடும்ப சூழ்நிலை காரணமா, அந்த நிலத்தை விற்பனை செய்துட்டேன். அதுக்குப் பிறகு, அப்பாவும் தம்பியும் இந்த ஊர்ல (முகையூர்) வாங்கின பத்து ஏக்கர் நிலத்துல, விவசாயம் செய்றதோட காளானும் வளர்க்கிறேன்” என்று முன்னுரை கொடுத்த ரமேஷ், தொடர்ந்தார்.
‘‘திண்டிவனம் பக்கத்துல ஒரு நண்பர் பால்காளான் வளர்த்தார். அவர்தான் என்னையும் காளான் வளர்ப்பில் ஈடுபடுத்தினார். நாலு வருஷத்துக்கு முன்ன காளான் வளர்ப்புல இறங்கின சமயத்துல... நோய்த்தொற்று காரணமா காளான்ல பல பிரச்னைகள் வந்தது. அப்பறம், கே.வி.கே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்னு போய் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தேன்.
சில நண்பர்களோட சேர்ந்து முறைப்படி இந்தத் தொழிலைச் செய்ய ஆரம்பிச்சதும் பிரச்னைகள் குறைய ஆரம்பிச்சதோட வருமானமும் வர ஆரம்பிச்சது. நண்பர்கள் பார்ட்னர்களா இருந்தாலும் அவங்களுக்கு வேற தொழில்கள் இருக்கிறதால, முழுக்க பண்ணையைப் பராமரிக்கிறது நான் மட்டும்தான். ரெண்டரை வருஷமா லாபகரமா காளான் வளர்ப்பு நடந்துக்கிட்டிருக்கு” என்றவர், காளான் வளர்ப்பு குறித்து சொல்ல ஆரம்பித்தார்.
‘‘ஒரு நாளைக்கு 30 படுக்கை (காளான் பெட்) தயாரிக்கிறோம். அந்தக் கணக்குல மாசத்துக்கு 900 படுக்கைகள் தயாரிக்க முடியும். ஒவ்வொரு படுக்கையிலும் மூணு தடவை அறுவடை செய்யலாம். ஒரு படுக்கையில மூணு அறுவடைக்கும் சேர்த்து 1,300 கிராம் வரை பால்காளான் கிடைக்கும். மொத்த படுக்கைகள்ல இருந்தும் சராசரியா ஒரு நாளைக்கு 30 கிலோ அளவுக்கு காளான் கிடைக்கும். மாசத்துக்கு 900 கிலோ. மொத்த விலைக்குக் கொடுக்கிறப்போ கிலோ 150 ரூபாய்னு எடுத்துக்குவாங்க. சில்லறை விற்பனையில 220 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். எப்படிப் பார்த்தாலும் சராசரியா கிலோவுக்கு 160 ரூபாய் கிடைச்சுடும். அந்தக் கணக்குல பார்த்தா ஒரு மாசத்துக்கு 900 கிலோ காளானை விற்பனை செய்றது மூலமா, 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் செலவு 54 ஆயிரம் ரூபாய் போக, மீதம் 90 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்” என்ற ரமேஷ் நிறைவாக,
‘‘வைக்கோலை வெளிய வாங்கிறப்போ அது ரசாயன உரம் போட்டு விளைய வெச்சதானெல்லாம் பார்த்து வாங்க முடியாது. அதேமாதிரி காளான் உற்பத்திக்கு, வைக்கோலை கிருமிநீக்கம் செய்றதுக்காக சில மருந்துகளைப் பயன்படுத்துவாங்க. வைக்கோல் காளான் வளர்றதுக்கு ஒரு மீடியம்தாங்கிறதால காளான்ல ரசாயன பாதிப்பு இருக்காது. ஆனாலும் நான் கிருமிநீக்கம் செய்ய மருந்துகளைப் பயன்படுத்துறதில்லை. எங்க தோட்டத்துல இயற்கை விவசாயத்துல விளையுற வைக்கோலை வேக வெச்சு கிருமிநீக்கம் செய்துதான் காளான் வளர்க்கிறேன். அதனால, எங்க பண்ணையில உற்பத்தியாகுற காளான் 100% இயற்கைக் காளான். பால்காளான் விற்பனையில எந்த பிரச்னையும் இல்லை. எங்களோட உற்பத்திக்கு அதிகமாவே ஆர்டர் இருக்கு. அடுத்து இன்னும் உற்பத்தியை அதிகரிக்கிற முயற்சியில இருக்கிறோம்” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
ரமேஷ்,
செல்போன்: 94432-26467
சென்ற தலைமுறையில் விவசாயம் பார்த்து வந்தவர்கள் தங்கள் பிள்ளைகள் விவசாயத்துக்கு வரக்கூடாது என்ற மனநிலையில் இருந்தார்கள். ஆனால், இன்று விவசாயத்துக்கே சம்பந்தமில்லாத பல இளைஞர்கள் கூட விவசாயத்தில் கலக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இது ஓர் ஆரோக்யமான மாற்றம். அந்த வகையில், காளான் வளர்ப்பு மூலம் கணிசமான வருமானம் பார்த்து வருகிறார், பொறியாளர் ராஜ்குமார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருக்கிறது, இவரது காளான் பண்ணை.
“பொறியியல் பட்டம் படிச்சுட்டு சென்னையில் தனியார் நிறுவன வேலையில இருந்தேன். சம்பளம் செலவுக்குத்தான் சரியா இருந்தது. வேற வேலை பார்க்கலாம்னு நினைச்சப்ப இனி சம்பளத்துக்கு வேலை பார்ப்பதை விட நாமே சுயதொழில் பண்ணனும்னு முடிவு பண்ணிணேன். அப்ப என் நண்பர்கள் காளான் வளர்ப்பு பற்றி சொன்னாங்க. அவங்களோடு சேர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டு, இந்த இடத்தை வாடகைக்குப் பிடிச்சு, பண்ணை அமைச்சேன்.
இது பதினைந்து சென்ட் இடம். 600 சதுரடியில் கீற்றுக் கொட்டகை அமைச்சு, சிப்பிக்காளான் உற்பத்தி செய்றேன். கீற்றுக் கொட்டகை அமைச்சு, கீழே மணலைக் கொட்டிட்டா காளான் வளரத் தேவையான குளிர்ச்சியான சூழல் கிடைச்சிடும். காளான் வளர்க்கத் தேவையான விதையை ஒரு பாக்கெட் (350 கிராம்) நாற்பது ரூபாய்க்கு வாங்குறேன். அதை வெச்சு ரெண்டு படுக்கைகள் தயாரிக்கலாம். வைக்கோலையும், விதையையும் கொண்டு தயாரிக்கிற படுக்கைகளை உரியில் தொங்கவிட்டு, நீர் தெளிச்சுக்கிட்டு வந்தா, 25 நாளில் இருந்து 45 நாட்கள் வரை காளான் அறுவடை செய்யலாம்.
100 படுக்கைங்க இருந்தா தினம், மகசூலா 10 கிலோ முதல், 20 கிலோ வரை அறுவடை செய்யலாம்.
கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். செலவு போக, தினமும் ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது. விற்பனைக்குப் பிரச்னையே இல்லை. தினமும் பதினைந்து கிலோ காளானை, திருச்சி, மதுரைனு அனுப்புறேன். காளானை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்றேன். பொறியியல் படிப்பு மூலம் கிடைக்காத நம்பிக்கை இந்த விவசாயம் மூலமா கிடைச்சிருக்கு” என்றார் சிலாகித்து.
காளான் வளர்ப்புக்கு படுக்கைகள் தொங்க விட ஓர் அறை (ரன்னிங் ஷெட்); காளான் வளர ஓர் அறை; மற்ற வேலைகள் செய்வதற்கு ஓர் அறை என மூன்று அறைகள் தேவை. படுக்கைகளைத் தொங்க விடுவதற்கான அறை, 10 அடி அகலம், 30 அடி நீளம் இருக்க வேண்டும். கூரை 15 அடி உயரத்தில் இருக்க வேண்டும். கூரைக்குக் கீழே காளான் படுக்கைகளை உரி போல தொங்க விடுவதற்கான அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
300 சதுரடி அளவு அறையில் ஒர் உரியில் நான்கு படுக்கைகள் என்ற விகிதத்தில், 900 படுக்கைகளைத் தொங்க விட முடியும்.
காளான் வளர்ப்பு அறை அமைக்க 11 அடி அகலம், 60 அடி நீளம், மூன்றரை அடி ஆழத்தில் இரண்டு குழிகள் எடுத்துக்கொள்ளவேண்டும் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 3 அடி ஆழம் என பரிந்துரை செய்கிறது). குழியின் மேற்புறத்தில் ஆறடி உயரத்துக்கு ஆர்ச் அமைத்து, ஊதா நிற ‘சில்பாலீன் ஷீட்’ கொண்டு ‘பசுமைக்குடில்’ போல அமைக்க வேண்டும். வெயில் அதிகமான பகுதியாக இருந்தால், பசுமைக்குடிலுக்கு மேல் தென்னகீற்றுகளைப் போட்டு வைக்கலாம். குழியின் தரைப்பகுதியில் அரை அடி உயரத்துக்கு மணலைக் கொட்டி வைக்க வேண்டும். குடிலின் ஒரு பக்கத்தில் காற்றை வெளியேற்றும் ‘எக்ஸாஸ்ட் ஃபேன்’ அமைக்க வேண்டும்.
70 நாட்களில்...
தரமான புது வைக்கோலை 2 முதல் 3 அங்குல நீளத்துக்கு வெட்டி, சுத்தமான தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைத்து, நெல் அவிக்கும் டிரம்மில் 45 நிமிடங்கள் அவிக்க வேண்டும். பிறகு, நிழலான இடத்தில் கொட்டி கையில் பிடித்தால், ஈரம் ஒட்டாத அளவுக்கு உலர்த்த வேண்டும்.
14 X 26 என்ற அளவில், உள்ள பாலித்தீன் பையில் கொஞ்சம் வைக்கோல் கொஞ்சம் காளான் விதைகள்... என அடுக்கடுக்காக நிரப்பி பையைச் சுற்றிலும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட சாக்குத் தைக்கும் ஊசியால் 9 துளைகள் இட வேண்டும். தயாரிப்புக்குப் பயன்படுத்தும் விதைகள், வெண்மை நிறத்தில் இருக்க வேண்டும். மஞ்சள், கறுப்பு நிறங்களில் இருந்தால், அந்த விதைகளைப் பயன்படுத்தக்கூடாது.
இப்படித் தயாரிக்கப்பட்ட படுக்கைகளைப் படுக்கைத் தயாரிப்பு அறையில் தொங்க விட வேண்டும். இந்த அறையின் வெப்பநிலை 24 முதல் 28 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். தினமும் அறையின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைப் பராமரிக்க தரையில் மணல் பரப்பி, அதன் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். தொங்கவிடப்பட்ட படுக்கைகளில் 18 முதல் 24 நாட்களில் மைசீலியம் பூஞ்சணம் பரவிவிடும்.
நன்கு பூஞ்சணம் பரவிய படுக்கைகளை கத்தி மூலம் குறுக்காக வெட்டி இரண்டு பைகளாக்க வேண்டும். வெட்டப்பட்ட பகுதியில்... அவித்து ஆறவைக்கப்பட்ட கரம்பை மண்ணைத் தூவி, காளான் வளர்ப்பு அறையில் (பசுமைக் குடில் போன்ற அறை) வைக்க வேண்டும். படுக்கைகளை வைப்பதற்கு முன்பாக அறையைத் தொற்றுநீக்கம் செய்ய வேண்டும். படுக்கைகளை அடுக்கிய பிறகு, தினமும் கைத்தெளிப்பான் மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். இந்த அறையில் 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் 85 சதவிகித ஈரப்பதமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பராமரிப்பில் ஈடுபடும் நபர்கள் கால்களை சுத்தமாகக் கழுவிய பிறகே அறைக்குள் நுழைய வேண்டும்.
வளர்ப்பு அறையில் வைத்த படுக்கைகளில் 7 முதல் 12 நாட்களில் மொட்டு வைக்க ஆரம்பிக்கும். 12 முதல் 18 நாட்கள் வரை தொடர்ந்து 6 நாட்கள் வரை அறுவடை செய்யலாம். இது முதல் அறுவடை. அடுத்து 7 நாட்கள் கழித்து, ஆறு நாட்கள் வரை இரண்டாவது அறுவடை செய்யலாம். அடுத்து 10 நாட்கள் கழித்து, ஆறு நாட்கள் வரை மூன்றாவது அறுவடை செய்யலாம். படுக்கை தயாரித்தது முதல், கடைசி அறுவடை வரை ஏறக்குறைய 70 நாட்கள் ஆகின்றன. இடைப்பட்ட நாட்களில் களைக் காளான்கள் முளைத்து வரும். அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.