சுற்றுலா பகுதிகள்

வ.உ.சி.பூங்கா: ஈரோடு மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பூங்கா. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பரந்நது விரிந்துள்ள இந்த பூங்கா, 1927-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி திறக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இப்பூங்கா ஆரம்ப காலத்தில் 'பீப்பிள்ஸ் பார்க்' என்றழைக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு வ.உ.சி. பூங்கா என்று இதற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Images

கொடிவேரி அணை: ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் உள்ள சிறிய அணை. பவானி ஆற்றின் குறுக்கே 300 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சராயன் என்கிற ஊர்த்தலைவர் ஒருவரால் கட்டப்பட்டது. இந்தத் தடுப்பணை ஒரு செயற்கை அருவியாக கொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்: ஈரோட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வெள்ளோடு ஏரி. மரங்கள் அடர்ந்த இந்த சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் சீஷனில் வெளிநாட்க்ப் பறவைகள் வந்து செல்கின்றன.

காளிங்கராயன் அணை: ஈரோட்டில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அணையின் வயது 700. கி.பி.1200 களின் மத்தியில் காளிங்கராயன் என்ற குறுநில மன்னரால் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது என்கிறது வரலாறு. இந்த அணையில் பாசனத்தண்ணீர் பிரிந்து செல்லும் வாய்க்கால் காளிங்கராயன் கால்வாய் என்றழைக்கபடுகிறது. 86 கி.மீ தூரம் ஓடி ஆவுடையார் பாறை என்ற இடத்தில் நொய்யலில் கலக்கிறது இந்த வாய்க்கால்.

பவானி கூடுதுறை: ஈரோட்டில் இருந்து 15 கி.மீ வடமேற்கில் பயணித்தால் வரும் புண்ணியஸ்தலம் பவானி கூடுதுறை. காவிரியும் பவானியும் சங்கமிக்கும் இதன் மையத்தில் இருக்கிறது புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் ஆலயம்.

பாரியூர் அம்மன் கோயில்: கோபிச்செட்டிப்பாளையத்தை ஒட்டி, பசுமை வயல் வெளிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இக்கோயில் வளாகத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

Images

கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம்: காவிரி ஆற்றங்கரையில் உள்ள தொன்மை வாய்ந்த சிவன் கோயில். ஞானசம்பந்தர், அப்பர்,சுந்தரர் ஆகிய மும்மணிகளால் பாடல் பெற்ற ஸ்தலம். இங்குள்ள முருகப்பெருமான் சந்நிதி குறித்து அருணகிரி நாதர் திருப்புகழில் பாடியுள்ளார். இக்கோவிலின் இன்னோர் சிறப்பு இங்கு வைணவமும் சைவமும் தழைதோங்கி நிற்கிறது. இக்கோயில் வளாகத்துக்குள் சிவன், விஷ்ணு மட்டுமின்றி, பிரம்மாவுக்கும் கோவில் இருப்பது தனிச்சிறப்பு.

சென்னிமலை: ஈரோட்டில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது சென்னிமலை முருகன் கோயில். கடல் மட்டத்தில் இருந்து 600 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இக்கோயில் தைப்பூஷ தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றது.

பண்ணாரி மாரியம்மன் கோவில்: சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அழகிய சூழலில் வீற்றிருக்கும் புகழ் பெற்ற ஆலயம். இக்கோயிலில் தொல்லியல் சிற்ப கலை அழகுடன் கட்டப்பட்டுள்ள அர்த்த மண்டபம், சோபன மண்டபம் மற்றும் மகா மண்டபம் இக்கோயிலின் அழகுக்கு அழகு சேர்ப்பவையாக அமைந்துள்ளன. ஆண்டு தோறும் பங்குனி மாதம் இங்கு நடைபெறும் குண்டம் திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கில் பக்தர்கள் திரளுவார்கள்.

ஊட்டி: ஈரோட்டிலிருந்து 108 கி.மீ. தொலைவில் இருக்கிறது எழில்மிகு ஊட்டி. மேற்குத் தொடர்ச்சி மலையின் சில்லென்ற காற்று, தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம் என பல இடங்களைக் கண்டுகளிக்கலாம்.