இனிதே தொடங்கியது பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015

Images

ஈரோட்டில் பசுமை விகடன் நடத்தும் பசுமை அக்ரி எக்ஸ்போ 2015 கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை தவத்திரு.பொன்னம்பல அடிகளார் திறந்துவைத்தார். இன்று 25ம் தேதி தொடங்கி வருகிற திங்கட்கிழமை 28ம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.

ஆயிரக்கணக்கான விவசாயிகள், 130 கண்காட்சி அரங்குகள் என்று கோலாகலமாக தொடங்கியது ஈரோடு அக்ரி எக்ஸ்போ. கருத்தரங்கு அரங்கில் இருக்கைகள் நிறைய, சிலர் நின்றுகொண்டே கருத்தரங்கு நிகழ்வின் உரையை கேட்டனர். காலை 8 மணியிலிருந்தே விவசாயிகள் நுழைவாயிலில் காத்திருந்து, பிறகு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து விவசாயிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்த தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியபோது, "மனிதனை புனிதமாக்குவது ஆன்மீகம். இயற்கையும் இறைவனும் ஒன்றே. அதை ஒன்றாக பாருங்கள். இறைமை எங்கும் இருக்கிறது. அதேபோல் இயற்கையும் எங்கும் இருக்கும். அதற்கு இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும்.

உண்மையா பாடுபடுவதால்தான் சிவபெருமான் மாட்டை பக்கத்தில் வெச்சுக்கிட்டார். அதனால் இயற்கைக்கு உண்மையா பாடுபடுங்க. பரிணாம வளர்ச்சியை உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பே திருநாவுகரசர் போன்ற முன்னோர்கள் இயற்கையை பற்றி சொல்லியிருக்காங்க. அதை முறையாக கடைப்பிடித்துக் கொண்டு வந்தோம். இப்போது அது முறையாக இல்லை.

Images

இயற்கை சார்ந்து நிலங்களை பிரித்திருப்பவன் தமிழன்தான். மலைவாழ் மக்கள் அவரவர்களுக்குரிய வாழ்க்கை முறையில் வாழ்வார்கள். பாலைவனத்தில் இருப்பவர்கள் ஒருமாதிரி வாழ்வார்கள். நிலங்களுக்கேற்ற உணவும், அதற்கேற்ற உற்பத்தி முறையும் தேவை. இதெல்லாம் இயற்கையை வளப்படுத்துவதற்குத்தான். மண் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். பாலை நிலமாக இருந்தாலும், அதை பசுஞ்சோலையாக மாற்றுவது விவசாயிகள் கையில்தான் இருக்கிறது.

நஞ்சை அமுதாக்கிய ஆழ்வார், நம்மாழ்வார், உலகின் ஒப்பற்ற வேளாண் விஞ்ஞானி ஆவார். நெல்லை குறிப்பிட்டு ஒரு வாசகம் சொல்வார். அடி காட்டுல, நடு மாட்டுல, நுனி வீட்டுல என்பார். மண்ணுல கொட்டுற ரசாயன உப்பு, மண்ணை மலடாக்கிவிட்டது. மண்ணுல நுண்ணுயிர் சங்கிலி இருக்குது. அதை வளமாக்குவதற்கு இயற்கை விவசாயம் தேவை. 1956ல் இங்கிலாந்துல சாலையோரம் நிறைய மரங்கள் இருந்தது. ஜப்பான் வண்டுகள் அந்த மரங்களை சேதப்படுத்தி விட்டது. அதுக்கு மரங்கள் மீது பூச்சிக்கொல்லி தெளிச்சிருக்காங்க. அதன்பிறகு அங்கிருக்கிற பறவைகள் ஒருதடவை கூட கூடு கட்டுல. மரங்களுக்கு கீழே இருந்த மண் புழுக்கள் இறந்ததே, பறவையினங்கள் அங்கு வராததுக்கு காரணமாயிடுச்சு. இதை மாற்றுவதற்கு இயற்கை விவசாயமே சரியான வழி" என்றார்.

முன்னோடி இயற்கை விவசாயியான தெலங்கானாவைச் சேர்ந்த நாகரத்தின நாயுடு பேசும்போது, "தமிழகத்துல ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள்ல மற்ற மாவட்டங்களை விட தற்கொலைகள் குறைவாக இருக்கு. நாட்டையும், பக்கத்து வீட்டையும் சுத்தமா வெச்சிகிட்டாலே, இயற்கை நம்மகூட இருக்கும். 2500 இயற்கை விவசாயிகளோட பண்ணைகளை பார்வையிட்டிருக்கிறேன். இதுவரைக்கும் அரசை நம்பாமல் விவசாயம் செஞ்சிட்டிருக்கேன். தரிசு நிலங்கள வாங்கி, அதை தயார் பண்ணி விவசாயம் செஞ்சிருட்டிருக்கேன்.

Images

பொதுவா ஒண்ணு சொல்வாங்க ‘வரும்போது என்ன கொண்டுவந்தோம். போகும்போது என்ன கொண்டுபோனோம்’. அதனாலதான் மண்ணுக்கு தேவையானதை செஞ்சிட்டிருக்கேன். இயற்கை விவசாயத்தல தேவையில்லாத செலவுகள் கிடையாது. அதிலேயும் கலப்பு பயிர் செய்யுங்க. ஒரு பயிர் கைவிட்டாலும், இன்னொரு பயிர் கைகொடுக்கும். கடனாளி ஆகாம காப்பாத்திடும். இயற்கை விவசாயத்துல லாபம் அதிகம். அதை திறமையா செய்றதுக்கு நிறைய பேருக்கு தெரியறதில்ல" என்றார்.

கண்காட்சியில் வங்கிகளின் ஆலோசனை அரங்குகள், பம்ப்செட்கள், இயற்கை தானியங்கள், இயற்கை உரங்கள், வேளாண் இடுபொருட்கள், வீட்டுத்தோட்ட உபகரணங்கள், பரண்மேல் ஆடு வளர்ப்பு உபகரணங்கள், பாரம்பர்ய கருவிகள், களையெடுக்கும் கருவிகள், உழவு கருவிகள், மூடாக்கு, நார்க்கழிவுகள் என அணிவகுத்து நிற்கின்றன.

பசுமை விகடனின் பிரத்யேக அரங்குகளில் முன்னோடி இயற்கை விவசாயிகளின் அனுபவ பகிர்வு, சந்தா சேகரிப்பு ஆகியவை நடைபெற்று கொண்டிருக்கின்றன. இருசக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதிகளும், உணவுக்கான அரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நுழைவு கட்டணம் 30 ரூபாய்.