பசுமை விகடன்: சாதனைகள்

Images

ஒற்றை நாற்று நடவு, ஜீரோ பட்ஜெட், இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், கால்நடை என மாவட்டம் தோறும் 500 முதல் 2000 பேர் வரை கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றிக் கண்டிருக்கிறது பசுமை விகடன். எப்போதும் பசுமை விகடன் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மாபெரும் வரவேற்பு அளித்து வரும் விவசாயிகளுக்கு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதன் அடுத்த கட்டமாக வேளாண் கண்காட்சி நடத்தும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது. விவசாயம் சம்பந்தப்பட்ட துறைகளின் அத்தனை தகவல்களையும், தொழில்நுட்பங்களையும் இந்தக் கண்காட்சியின் வாயிலாக அளிக்க முடியும் என்று நம்புகிறோம். மேலும் மேலும் தமிழக விவசாயிகளுக்கு புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தும் பணியின் அடுத்தக் கட்டமாகவே கண்காட்சியைக் கையில் எடுத்திருக்கிறது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

பசுமை விகடன் வெளியான நாள் தொடங்கி, தன் இறுதிக் காலம் வரை 'பசுமை விகடனுடன் இரண்டற கலந்திருந்தார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார். பசுமை விகடன் மூலம் இயற்கை வேளாண்மை, பாரம்பர்ய விவசாயம் என பல தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அளித்திருக்கிறார். பல கூட்டங்களில், ''தமிழக விவசாயத்தை 'பசுமை விகடனுக்கு முன்பு... பசுமை விகடனுக்குப் பிறகு...’ என்று இரண்டாகப் பிரிக்கலாம். அந்த அளவுக்கு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது பசுமை விகடன்’' என்று கூட்டங்களில் சொல்லி நெகிழ்ந்திருக்கிறார்!

'ஜீரோ பட்ஜெட் பிதாமகர்' சுபாஷ் பாலேக்கர்

Images

வட மாநிலங்களில் பிரபலமாக இருந்த 'ஜீரோ பட்ஜெட் விவசாயத் தொழில்நுட்பங்களை ஜீரோ பட்ஜெட் பிதாமகர்’ சுபாஷ் பாலேக்கரை வைத்து தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தினோம்.

2007-ம் ஆண்டு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சுபாஷ் பாலேக்கரை திண்டுக்கல் மாநகரில், சுமார் 800 விவசாயிகளுக்குப் பயிற்சியளித்தது, பசுமை விகடன். தமிழகத்தில் பாலேக்கர் அளித்த முதல் பயிற்சி அதுதான். அதைத் தொடர்ந்து, 2007-ம் ஆண்டு டிசம்பர் 29 முதல் 2008-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி வரை நான்கு நாட்களுக்கு விரிவான பயிற்சியை ஈரோடு மாநகரில் ஏற்பாடு செய்தோம். சுமார் 1,500 விவசாயிகள் கலந்து கொண்ட இந்த பயிற்சி வகுப்பினை நான்கு நாட்கள் நடத்தினோம்.

இன்று எண்ணற்ற விவசாயிகள் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த விவசாயிகளின் அனுபவப் பகிர்வு கூட்டங்களையும் தற்போது பல மாவட்டங்களில் நடத்தி வருகிறோம்.

இத்துடன் பல முன்னோடி இயற்கை விவசாயிகள், விவசாயப் போராளிகள், விவசாயச் சங்கங்களின் தலைவர்கள், விஞ்ஞானிகள், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பல்கலைக் கழகம், கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் என்று பலரும் பங்களித்திருக்கிறார்கள்.

பயிற்றுநர் பயிற்சி!

'விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல பல பயிற்றுநர்கள் அவசியம்’ என்ற நோக்கில் நம்மாழ்வாரின் நேரடி வழிகாட்டுதல்களோடு 'இனியெல்லாம் இயற்கையே’ என்ற தலைப்பில் களப்பயிற்சி அளிக்கலாம் என முடிவெடுத்து... 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் நாகப்பட்டினம் மாவட்டம், பாலையூரில் முதல் பயிற்சி தொடங்கப்பட்டது. தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட அப்பயிற்சி, பல முன்னோடி விவசாயிகளையும், பயிற்றுநர்களையும் உருவாக்கி இருக்கிறது. இன்றைக்கு தமிழக விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றத்துக்கு இந்தப் பயிற்சியும் ஓர் அடிப்படை.

கருத்தரங்குகள்

தமிழகத்தின் பல நகரங்களில்... கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மரம் வளர்ப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், பூச்சி மேலாண்மை, வீட்டுத்தோட்டம் மற்றும் கால்நடைகளுக்கான மூலிகை வைத்தியம் என பலவித தலைப்புகளில் நூற்றுக்கணக்கான பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், அரசு அமைப்புகள், ரோட்டரி சங்கங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் கைகோத்து இத்தகையப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் இதழியல் வரலாற்றில் எந்த ஒரு பத்திரிகையும் செய்திராத இந்த மாபெரும் பணி, பல விவசாயிகளை பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய வைத்துள்ளதுடன், விவசாயத்தில் பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

குரல் கொடுக்கும் பசுமை விகடன்!

பயிற்சிகள் அளிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாய சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக போர்க்குணத்துடன் களம் இறங்கவும் பசுமை விகடன் குழு தவறவில்லை. கரும்பு, நெல் விவசாயிகளின் போராட்டங்கள், வேளாண் விற்பனை மையங்களில் நடக்கும் முறைகேடுகள் போன்ற செய்திகளை அதிரடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று பல முறைகேடுகள் களையப்பட்டுள்ளன. தவிர, மத்திய அரசு அளித்த விவசாயக் கடன் தள்ளுபடி சலுகையை விவசாயிகளுக்கு அளிக்காமல், வங்கிகள் அலைக்கழித்தபோது, நேரடியாக களம் இறங்கி, விவசாயிகள் வங்கிகளில் பயிர் கடனுக்காக அடகு வைத்திருந்த நகைகள் மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன.

காட்டாமணக்கைக் கைவிட்ட அரசுகள்!

2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது, காட்டாமணக்கு சாகுபடித் திட்டம். 'இது ஒரு மோசடித் திட்டம், இதனால், விவசாயிகள் கடன்காரர்களாவதுதான் மிச்சம்’ என்ற எதார்த்தத்தை ஆணித்தரமாக, பசுமை விகடன் இதழில் ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து விழித்துக் கொண்ட விவசாயிகள், காட்டாமணக்கு சாகுபடியைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் அரசாங்கமே உண்மையை உணர்ந்து இத்திட்டத்தைக் கைவிட்டது, விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி.

விடிவை ஏற்படுத்திய விழிப்பு உணர்வு!

ஒப்பந்த சாகுபடி, மூலிகை சாகுபடி, சந்தன மரம் வளர்ப்பு, ஈமு கோழி வளர்ப்பு... என விவசாயிகளை ஏமாற்றும் திட்டங்கள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தியதில் பசுமை விகடன் பெரும் பங்காற்றியுள்ளது. ஈமு பண்ணைகளுக்கு எதிராக கோபிச்செட்டிபாளையத்தில் மிகப்பெரிய கருத்தரங்கு ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது. மரபணு மாற்றத்துக்கு எதிரான தொடர்ச்சியான கட்டுரைகள், அரசுத் துறைகளில் நடக்கும் அவலங்கள், கொள்கை முடிவுகள், அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகங்கள், மக்களுக்கு எதிராக அநீதிகள் ஆகியவற்றை சாட்டையடியாக விமர்சிக்கும் 'கோவாணாண்டிக் கடிதங்கள்' வாசகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

மண்ணுக்கும் மக்களுக்கும் பாலமாக...!

வேலையாட்கள் பற்றாக்குறையால் சிக்கித்தவிக்கும் விவசாயிகளைக் கரையேற்றுவது கருவிகள் மட்டும்தான் என்பதை உணர்ந்து, புதுப்புதுக் கருவிகள் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. விவசாயிகளே விஞ்ஞானிகளாக மாறி, தங்கள் தேவைக்காக உருவாக்கிய சிறு சிறு கருவிகளைப் பற்றிய ஏராளமான கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. கருவிகளின் விலை, மானியம், உபயோகிப்பாளர் கருத்து... போன்ற தகவல்கள் விவசாயிகளுக்குப் பெரும் உதவியாக அமைந்தன

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சாதனைகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் விவசாயிகளுக்குக் கொண்டு சேர்ப்பதிலும் முன்னணியில் நிற்கிறது, பசுமை விகடன். இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பற்றிய சந்தேகங்களைத் தானியங்கி தொலைபேசி வாயிலாகத் தெரிந்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பசுமைச் சந்தை மூலமாக தங்களிடம் இருக்கும் பொருட்களை, இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்வதுடன், பல புதிய நண்பர்களையும் பெற்றிருக்கிறார்கள், விவசாயிகள். மொத்தத்தில் எங்கோ மூலையில் முடங்கிக்கிடந்த உழவனை உலகம் முழுக்க தொடர்புகள் உள்ள உழவனாக மாற்றியது பசுமை விகடனின் பெருமைகளில் ஒன்று.

சிறுதானியங்கள்

சிறுதானியங்கள் மற்றும் சிறுதானிய உணவுகள் குறித்து இன்றைக்கு பெரியளவில் விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடித்தளமிட்ட பெருமை பசுமை விகடனுக்கு உண்டு. சிறுதானியத்துக்கென்றே ஆந்திராவில் செயல்படும் டிடிஎஸ் தொண்டு நிறுவன பெண்களின் பணிகளைப் படமெடுத்து தொடராக வெளியிட்டது. சிறுதானிய உணவுகளுக்கென்று தொடர், சிறப்பிதழ் என பல வகைகளிலும் சிறுதானியங்களை முன்னெடுத்து சென்றது. சொல்லப்போனால் மறந்துவிட்டிருந்த சிறுதானியங்களை முதலில் பேச தொடங்கியதே பசுமை விகடன்தான்.

புதிய தலைமுறைக்கான பாதை!

விவசாயம் செய்வதை கேவலமான தொழில் என நினைத்த சமூகம், இன்று, 'விவசாயம் பெருமைப்படத்தக்க வருமானம் உள்ள தொழில்’ என, தனது பார்வையை மாற்றிக் கொண்டிருப்பதுடன், படித்த இளைஞர்கள், மாணவர்கள், நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர், கணிணித்துறை இளைஞர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், சினிமாத்துறையினர் என பல தரப்பினரிடமும் விவசாயம் மற்றும் இயற்கை மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறது, பசுமை விகடன். ஓய்வு பெற்ற நீதிபதி சடையாண்டி, தமிழக தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் நடராஜன் ஐ.பி.எஸ், இந்நாள் தலைவர் 'அட்வகேட்’ நவநீதகிருஷ்ணன், மென்பொருள் பொறியாளர் 'சம்பங்கி’ மருதமுத்து... என பலரை உதாரணமாகச் சொல்லலாம்.

பசுமைப் பணிகள் ஒரு பார்வை...!

Images

திருச்செங்கோடு பகுதியில் 30 ஆண்டுகாலப் பிரச்னையாக இருந்த தோல் சந்தை கழிவுநீர்ப் பிரச்னைக்கு தீர்வு கண்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் யானைகள் வழித்தடங்களை மறித்து, கட்டடம் எழுப்பியிருக்கும் நிறுவனங்களை வெளிச்சமிட்டது.

வறட்சி நிவாரண நிதி வழங்குவதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தி, மீண்டும் நிவாரணம் பெற்றுத் தந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், வடசேரியில் மக்கள் போராட்டத்துக்கு துணை நின்று, எரிசாராய ஆலை வரவிடாமல் தடுத்து நிறுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம், தேனாம்படுகையில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்த நீர்த்தேக்கத்தை, மாவட்ட ஆட்சியர் சண்முகம் மூலமாக புனரமைத்தது.

உடுமலைப்பேட்டையில் தரமில்லாத மக்காச்சோள விதைகள்; பல்லடம் பகுதியில் தரமில்லாத காலிஃபிளவர் விதைகள் ஆகியவற்றுக்கு கம்பெனிகளிடம் இழப்பீடு வாங்கித் தரப்பட்டது.

கன்னியாகுமரியில் தென்னை வாடல் நோய்க்கும், தேனியில் வாழை வெடிநோய்க்கும் வல்லுநர்களின் நேரடி ஆலோசனை வழங்கியது.

இயற்கை விவசாயத்தை நசுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட, வேளாண் மன்றச் சட்டம் எனும் கறுப்புச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகளைப் பொங்கி எழ வைத்து, சட்டத்தையே திரும்பப் பெற வைத்தது!

'எண்டோசல்ஃபான் எமன்' என்கிற தலைப்பில் பூச்சிக்கொல்லியின் தீமைகளை விரிவாக எடுத்துரைத்து, அந்தப் பூச்சிக்கொல்லியை தமிழகத்தில் தடைசெய்ய வைத்தது.

பி.டி. எனப்படும் மரபணு மாற்று விதைகளுக்கு எதிராக கடுமையான வாதங்களை எடுத்து வைத்து, விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் குரலை ஓங்கி ஒலித்து, தமிழகத்தில் உணவுப் பொருட்களில் பி.டி-க்கு இடம் இல்லை என்று அரசாங்கத்தை அறிவிக்கச் செய்தது.

நூறு நாள் வேலை திட்டத்தைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டு, அதனால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகளை முதன்முதலில் பதிவு செய்தது.

Images

நாட்டு மாடுகள், பாரம்பர்ய ரக விதைகளைப் பரவலாக்குதல் என எல்லை விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, அழியும் தருவாயில் இருந்த அறுபதாம் குறுவை, பூங்கார் உள்ளிட்ட ரக நெல் விதைகள் மீட்டெடுக்கப்பட்டு பரவலாக்கப்படும் விஷயத்தில் பங்களிப்பது!

ராலேகான் சித்தி எனும் வறண்ட கிராமத்தை, வளமாக்கிய அண்ணா ஹஜாரே மற்றும் அவருடைய கிராமம் இரண்டையும் ஒரு நீண்ட தொடர் மூலமாக தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியது.

தமிழகத்தில் டி.ஏ.பி. உள்ளிட்ட ரசாயன உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட சமயத்தில், ஆங்காங்கே இயற்கை உரங்களே போதும் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் விழிப்பு உணர்வு பயிற்சிக் கூட்டங்களை நடத்தியது!

மரப்பயிர்கள் வளர்ப்பில் மகத்தான மகசூல் என்பதைத் தொடர்ந்து விவசாயிகளின் மனதில் விதைத்து, தமிழகம் தழுவிய அளவில் பெருவாரியான விவசாயிகளை மரம் வளர்ப்பில் இறக்கி விட்டிருப்பது!

ஆடு வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், காளான் வளர்ப்பு உள்பட பலவிதமான பயனுள்ள விஷயங்களை கையில் எடுத்து, தமிழகம் தழுவிய அளவில் தொடர்ந்து பயிற்சிகளை அளித்து வருவது.

ரசாயன வேளாண்மைப் பக்கம் மட்டுமே பெரும்பாலும் பார்வையை வீசிக் கொண்டிருந்த அரசு நிறுவனங்களை இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பிவிட்டது.

உங்களின் பேராதரவோடு பசுமை விகடன் சாதித்த பட்டியல் இன்னும் இன்னும் நீண்டுகொண்டே போகும். அதேபோல இன்னும் இன்னும் சாதிக்க வேண்டிய பட்டியலும் நீண்டு கொண்டேதான் இருக்கிறது. அவற்றையும் உங்களின் பேராதரவோடு சாதிப்போம்!